சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் விசாரணை உரிய முறையில் நடந்துகொண்டிருக்கிறது.
2 பள்ளிகளுக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 2 வாரங்களில் மற்ற 2 பள்ளிகளுக்கும் அரசு தனி அதிகாரியை நியமிக்கும் என்றனர். அப்போது, தமிழகத்தில் பணியாற்றும் பிற மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ெஜ.ரவீந்திரன், இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லாததால் அதுபோன்ற ஒரு குழுவை அமைக்க தேவையில்லை என்று தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மீதமுள்ள இரண்டு பள்ளிகளையும் நிர்வகிக்க ஒரு வாரத்தில் அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும். விசாரணை நல்ல சரியான விதத்தில் நடப்பதால் சிபிஐ விசாரணை தேவையில்லை. விசாரணை நிலை தொடர்பான அறிக்கையை மூன்று மாதத்திற்கு ஒருமுறை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பையும், இழப்பீட்டையும் வழங்க வழி செய்த மனுதாரர் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசத்திற்கு இந்த நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவிக்கிறது என்று கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
The post கிருஷ்ணகிரி பள்ளி விவகாரம்; சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியமில்லை: வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.