கிருஷ்ணகிரி: தண்ணீர் தொட்டியில் மூழ்கி தந்தை-மகன் பலி

1 month ago 8

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மாரண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 37), கட்டிட மேஸ்திரி. இவருக்கு பிரமிளா என்ற மனைவியும், சந்தோஷ்குமார் (11), கலையரசன் (9) ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். சந்தோஷ்குமார், சூளகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் நேற்று மாலை முனிரத்தினம், அவருடைய மூத்த மகன் சந்தோஷ் குமாரை அழைத்துக்கொண்டு அந்த பகுதியில் விவசாயத்திற்காக கட்டி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றார். அந்த தொட்டி 12 அடி ஆழம் கொண்டது. அந்த தொட்டியில் முனிரத்தினமும், சந்தோஷ்குமாரும் குளித்து கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் திடீரென தண்ணீரில் மூழ்கினர். இதைத்தொடர்ந்து அவர்களது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் நீச்சல் தெரியாததால் தந்தையும், மகனும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் அங்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்ற இடத்தில் தந்தையும், மகனும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நஞ்சாபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Read Entire Article