கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, கோயில் பூசாரி பதவிக்கு 25 பேர் போட்டியிட்ட நிலையில், 22 வயது இளைஞரை பூசாரியாக மைசூர் காளை தேர்வு செய்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாம்பல்பள்ளம் கிராமத்தில், சுயம்பு முனீஸ்வரன் கோயில் உள்ளது. சுற்றியுள்ள கிராம மக்கள், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு செல்லும் பயணிகள் மிகவும் சக்தி வாய்ந்த சுவாமி என வணங்கி வருகின்றனர். கிருஷ்ணகிரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது இக்கோயிலை அகற்ற வேண்டும் என பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டது. நீண்ட ஆண்டுகளுக்கு பின் தற்போது உள்ள கோயில் இருக்கும் இடத்திற்கு அருகில், புதிய கோயில் அமைக்கப்பட்டு, சுயம்பு முனீஸ்வரன் கோயில் மாற்றப்பட்டு திறக்கப்பட்டது. அதன் பிறகே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
இந்த கோயில் அருகே கிராம மக்கள் சார்பில் வெக்காளியம்மன் கோயில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக, இக்கோயிலுக்கு பூசாரியை நியமிப்பதில் போட்டி நிலவியது. 25க்கும் மேற்பட்டோர் போட்டியில் இருந்தனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தை போக்க, காளையை அழைத்து பூசாரியை தேர்வு செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து அருள்பாலிக்கும் காளை வரவழைக்கப்பட்டது. சாம்பல்பள்ளம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து, மேளதாளத்துடன் காளையை அலங்கரித்து வெக்காளியம்மன் கோயிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு பூசாரி பதவிக்கு போட்டியிடும் 25 பேரை வரிசையாக அமர வைத்தனர். காளை கோயிலை மூன்று முறை சுற்றி வலம் வந்தது.
மேலும், பூசாரி பதவிக்கு போட்டியிட்டவர்களை சுற்றி சுற்றி வந்தது. இறுதியாக 22 வயது இளைஞரின் முதுகில் செல்லமாக முட்டி அவரை தேர்வு செய்தது. அதன்படி, தேர்வு செய்யப்பட்டவர் பூசாரியாக அறிவிக்கப்பட்டு பூஜைகளை ெசய்தார். காளை மூலம் பூசாரி தேர்வு செய்யப்பட்ட வினோத நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
The post கிருஷ்ணகிரி அருகே கோயில் பூசாரியை தேர்வு செய்த மைசூர் காளை appeared first on Dinakaran.