கிருமி நீக்கம் செய்யாத பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு தடை

5 days ago 2

கருர், மே 16: கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸானது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்ரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைஸிலும் சேர்நது விடும் என்பதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப் போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்களின் நலனின் அக்கறையுள்ள அரசு, கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைஸை தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது, போக்குவரத்து செய்வது, விநியோகம், விற்பனை செய்வது ஆகியவற்றை ஒராண்டிற்கு தடை செய்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது இந்த தடையானது ஏப்ரல் 8ம்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே, உணவு வணிகர்கள் எவரும் கிருமி நீககம் செய்யப்படாத பச்சை முட்டையில இருந்து மையோனைஸை தயாரிக்கவோ, அவ்வாறு தயாரித்த மையோனைஸை இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அரசு உத்தரவை மீறி கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைஸை தயாரிப்பது, விற்பனை செய்வது போன்றவை கண்டறியப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்து, உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வு செய்யப்பட்டு, பகுப்பாய்வு அறிக்கையின்படி தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், உணவு பாதுகாப்புத்துறையினரின் கள ஆய்வின் போது கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைஸ் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டால் உரிய விசாரணைக்கு பிறகு, உணவு பாதுகாப்பு உரிமம் இடைநீக்கம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், உடல் நலனை பாதுகாக்க வசதயாக நுகர்வோர்களும் தடை செய்யப்பட்டுள்ள இதனை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எனினும் மையோனைஸ் பிரியர்களுக்கு மாற்று தேர்வாக கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் சந்தையில் தொடர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அவற்றை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ வணிகர்களூக்கு எந்த தடையும் இல்லை. பதப்படுத்தப்பட்ட முட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்கா சைவ மையோனைஸ் ஆகியவற்றை நுகர்வோர்கள் அவரவர்களின் உடல்நிலைககு ஏற்றவாறு சரிவிகித உணவின் அளவுக்கு சாப்பிடலாம். உணவு வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களின வசதிக்காக பல்வேறு வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைஸை தடை செய்யப்பட்டதாகும். உணவக உரிமையாளர்கள், உணவங்களில் கிருமி நீக்கம் செய்யப்படாத இதனை தயாரிக்க கூடாது. உணவக உரிமையாளர்கள் தமது நுகர்வோர்களுக்காக உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று, தயாரிக்கப்பட்டு பொட்டலமிட்டு லேபிள் விபரங்களுடன் சந்தையில் கிடைக்கும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்ட முட்டையில் இருந்து தயாரித்த மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத மையோனைஸ் பொட்டலங்களை மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்தலாம்.

மேலும், கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையில் தயாரிக்ப்பட்ட மையோனைஸ் அனுமதிக்கப்பட்டதாகும். முட்டை கலக்காத சைவ மையோனைஸ் அனுமதிக்கப்பட்டதாகும். இவை இரண்டும், பொட்டலமிட்டு, லேபிள் விபரங்களுடன் விற்பனை செய்யப்பட வேண்டும்.

வணிகர்கள், கிருமி நீக்கம் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்ட முட்டையில் தயாரிக்கப்படும் மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் சொந்த தயாரிப்பு உணவுப் பொருளாக உள்ளதால், அதனை தயாரித்து விற்பனை செய்ய மத்திய உணவு பாதுகாப்பு உரிமத்தினை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து ரூ.7500 கட்டணம் செலுத்தி பெற்ற பின்னரே தயாரித்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு விற்பனை செய்ய வேண்டும். தவறினால், சட்டத்தில் பிரிவு 63ன் படி வழக்கு பதியப்படும்.
உணவு வணிகர்கள் தடை செய்யப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட மையோனைஸ் குறித்து மேலும் தகவல் அறிய விரும்பினால் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடத்தில் செயல்படும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை: புகார் தரலாம்
நுகர்வோர்கள் மையோனைஸ் குறித்து புகார் அளிக்க விரும்பினால், 94440- 42322 என்ற உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் புகார் சேவை எண்ணிற்கோ அல்லது டிஎன்எப்எஸ்டி ஆப்பின் மூலம் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

The post கிருமி நீக்கம் செய்யாத பச்சை முட்டையில் தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு தடை appeared first on Dinakaran.

Read Entire Article