பாகூர், பிப். 6: புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே முள்ளோடையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை இப்பள்ளியின் இ-மெயில் ஐ.டி.க்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதைப்பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சஜித், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார், அந்த பள்ளிக்கு விரைந்து வந்தனர். மேலும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாயுடன் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். வெடிகுண்டு இருக்கிறதா? என மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஒவ்வொரு பகுதியாக அங்குலம், அங்குலமாக சோதனையிட்டனர். மேலும் பள்ளி மைதானம், வளாகம், அறைகள் என அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். ஆனால் வெடிகுண்டு எங்கும் கிடைக்கவில்லை. புரளி என்று தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், இமெயில் குறித்து விசாரணை நடத்தினர். ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடப்பட்டுள்ளது. அந்த பள்ளியின் ஒரு கிளை இங்கும் செயல்பட்டு வருகிறது.
ஈரோடு பள்ளியின் இமெயிலை முள்ளோடையில் இருக்கும் பள்ளியும் பயன்படுத்தி வருவதால், அந்த மிரட்டல் இங்கும் வந்துள்ளது தெரியவந்தது. மதியம் 2 மணியளவில் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தெரிகிறது. பள்ளி நேரம் என்பதால் யாரும் இமெயிலை கவனிக்கவில்லை. மாலை 3.30 மணி அளவில் பள்ளி விடப்பட்டதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். அதன்பிறகு நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணிக்காக, இமெயிலை சோதனை செய்து பார்த்தபோது, இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்தும் மின்னஞ்சல் முகவரியை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கிருமாம்பாக்கம் அருகே பரபரப்பு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.