கிருபை உனக்குப் போதும்

5 hours ago 2

ஒரு ஊரில் ஏழை விதவைப் பெண் ஒருத்தி வசித்து வந்தாள். அவளுக்கு ஒரே ஒரு மகனும் உண்டு. அவளுடைய ஏக்கமெல்லாம் எப்பொழுதும் தம் மகனைக் குறித்துதான் காணப்பட்டது. தான் எப்படிப் போனாலும் பரவாயில்லை தன்னுடைய மகனை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவளுடைய குறிக்கோளாகவும் இருந்தது. இப்படியாக தன்னுடைய மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்தாள்.ஆனால் மகனுக்கோ தாயின் மேல் பல காரியங் களில் வெறுப்புதான் காணப்பட்டது, ஏனென்றால் இவனோடு படிக்கிற பிள்ளைகள் எல்லாரும் மிகவும் செழிப்பாக காணப்பட்டனர். இதைப் பார்த்த இந்த மகனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தனக்கு ஒரு நல்ல வஸ்திரம் இல்லை. நல்ல சத்துணவுகள் வீட்டில் காணப்படவில்லை. பொழுது போக்குவதற்கு எந்தவிதமான பொருட்களும் தன்னுடைய வீட்டிலே இல்லையே என்கிறதான ஒரு ஏக்கமும் இவனுடைய உள்ளத்தில் காணப்பட்டது.

இந்த மகன் தன்னுடைய தாயிடம் இதைப் பற்றி பேசினால் அவனுடைய தாய் கொடுக்கிற பதில் கர்த்தருடைய கிருபை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என்பாள். இந்த மகனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் இந்த தாயோ தன்னுடைய சரீரத்திற்கு போதுமான உணவு இல்லாமல் தன்னுடைய மகனுடைய பள்ளிப் படிப்பிற்காக தன்னுடைய இரத்தத்தையும் கொடுத்து அதன்மூலம் கிடைக்கிற பணத்தைக் கொண்டு எல்லாவற்றையும் கவனித்து வந்தாள்.இப்படியாக தன் மகனை ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தாள். இந்த தாயின் மகனும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு படித்து ஒரு நல்ல வேலையில் தன்னுடைய சொந்த ஊரிலே அமர்ந்தான். வேலையில் பயிற்சி பெறுவதற்காக இந்த மகன் சில நாட்கள் தன்னுடைய தாயை விட்டு பிரிந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டியது இருந்தது, இதனால் தாயை பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியூருக்கு கடந்து சென்றான்.

இதோ இந்த மகன் பயிற்சி முடித்து திரும்பி வரும் போது அவனுடைய தாய் படுத்தபடுக்கையாய் கிடந்தாள். அவளுக்கு ஏற்பட்ட நோய் அவளை மிகவும் கொடியதாய் தாக்கியது. இதைக் கேள்விப்பட்ட இந்த தாயின் மகனுடைய இருதயம் நொறுங்கியது. அதுமட்டுமில்லாமல் இப்படிப்பட்ட கஷ்டத்திற்கு காரணம் என்ன என்பதையும், தாய் தன்னை எப்படிப் படிக்க வைத்தாள் என்கிறதான உண்மையையும் அந்த ஊர் ஜனங்களின் மூலம் தெரிந்து கொண்டான்.இதனால் அவனுடைய இருதயம் கதறியது. இப்பொழுதுதான் தன் தாய் அடிக்கடி சொல்லுகிற கர்த்தருடைய கிருபையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டான். தாயின் அளவற்ற ஈடு இணை செய்ய முடியாத இரக்கத்தை நினைத்து கதறினான். அவன் ஒரு முடிவு எடுத்துக் கொண்டான் இப்படிப்பட்ட கிருபையை காண்பித்த தன்னுடைய தாயை ஒருபோதும் இழந்து போவதில்லை என்று சொல்லி, தன்னுடைய தாயை நல்ல மருத்துவரிடம் காண்பித்து தன்னுடைய தாய்க்கு வைத்தியம் பார்த்தான். இதோ அவனுடைய தாயும் பிழைத்துக் கொண்டாள். இதனால் இந்த மகன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனென்றால் இந்த மகத்தான கிருபையை மீண்டும் பெற்றுக் கொண்டான்.

இறைமக்களே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தம்முடைய விலையுயர்ந்த இரத்தத்தை நமக்காக அதாவது நம்முடைய பாவத்திற்காக நஷ்ட ஈடாகக் கொடுத்து பிசாசின் கையிலிருந்து நம்மைக் காப்பாற்றி நமக்கு இவ்விதமாக தன்னுடைய கிருபையாகிய அன்பைக் கொடுத்திருக்கிறார். ஐயோ நம்முடைய தாயும் தகப்பனும் நண்பர்களும் செய்ய முடியாத அளவற்ற தியாகத்தை தம்முடைய கிருபையின் மூலம் செய்திருக்கிறார்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து “என் கிருபை உனக்குப் போதும்” (2கொரி 12:9) என்று நமக்குத் தெளிவுற உணர்த்தியுள்ளார். ஆகவே இப்படிப்பட்ட நல்ல கிருபை நம்மோடு கடைசி வரை இருக்க வேண்டுமானால் உயிர் நம்முடைய சரீரத்தில் இருக்கும் வரை இந்த கிருபை என்கிற கனியைக் கொடுக்கிற இயேசு என்கிற மரத்தை எப்பொழுதும் கெட்டியாகப் பிடித்துக் கொள்வோம்.

 

The post கிருபை உனக்குப் போதும் appeared first on Dinakaran.

Read Entire Article