கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம், அவுரங்காபாத்

2 days ago 5

கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் என்பது இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் வெருல் கிராமத்தில் அமைந்துள்ளது. இது 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாகும். இந்த ஆலயம் எல்லோரா குகைகளிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில், அவுரங்காபாத் நகரின் வடமேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிரிஷ்னேஷ்வர் ஆலயம் பற்றி சிவபுராணம், ஸ்கந்த புராணம், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலய அமைப்பும் வரலாறும்

13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் டெல்லி சுல்தான் படையெடுப்பால் கோயில் அமைப்பு அழிக்கப்பட்டது. முகலாய – மராத்திய மோதலின் போது மீண்டும் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோயில் பல முறை புனரமைக்கப்பட்டது. மாலோஜி போசலே 16 ஆம் நூற்றாண்டில் அதை மீட்டெடுத்தார். 18 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தூரின் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் ஆதரவின் கீழ் அதன் தற்போதைய வடிவத்திற்கு மீண்டும் கட்டினார். இது தற்போது இந்துக்களின் முக்கியமான யாத்திரைத் தலமாக உள்ளது. தினசரி நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசிக்கின்றனர். கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்க மந்திர் 44,000 சதுர அடி பரப்பளவில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. நிறைய சிற்பங்கள் உண்டு. அதன் உட்புறம் மற்றும் வெளிப்புற சுவர்களில் சிறந்த வடிவமைப்புகள் உள்ளன.

கர்ப்பகிரகத்தில் ஜோதிர்லிங்க மூர்த்தி காட்சி தருகிறார். சிவபெருமானின் வாகனமான நந்தியின் பெரிய மூர்த்தி பிரதான கதவுக்கு எதிரே உள்ளது. சிவப்பு நிறக் கற்களால் அமைந்துள்ள சுவர்களில் பெரும்பாலும் சிவபெருமானின் புராணங்களும், பெருமாளின் பத்து அவதாரங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்திலேயே விநாயகர், விஷ்ணு, துர்க்கை என தெய்வங்களுக்கு தனித்தனி சந்நதிகள் உள்ளன.

குஸ்ருனம் என்றால் மராட்டிய மொழியில் குங்குமப்பூ. உமையம்மையார் குங்குமத்தினால் சிவலிங்கத்தை பூஜை செய்து வெளிப்பட்டதால் இப்பெயர் வந்தது. சிவலிங்கம் சிவந்த நிறமாக இருக்கும். சுவாமி சற்று பள்ளத்தில் இருப்பார். அதன் அருகில் அர்ச்சகர் அமர்ந்து வேத மந்திரங்களைப் பாராயணம் செய்வார். சுவாமிக்கு மேல் தாரா பாத்திரம் உண்டு. சதா சுவாமியின் மீது நீர் ஒழுகிக் கொண்டே இருக்கிறது சிவலிங்கத் திருமேனியை நாம் கரத்தால் தொட்டு கண்களில் ஒத்திக் கொள்ளலாம்.

என்ன கதை?

தென் நாட்டில், தேவகிரி மலைக்கு அருகில் சுதர்மா என்ற பிராமணர் வசித்துவந்தார். அவர் மனைவியின் பெயர் சுதேஹா, இருவரும் ஒரு வரையொருவர் மிகவும் நேசித்தார்கள். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஜோதிடம் பார்த்தபோது சுதேஹாவின் ஜாதக கோள் அமைப்பின்படி குழந்தை இல்லை என்று காட்டியது. சுதேஹாவுக்கு வருத்தமாகிவிட்டது. எப்படியாவது தங்கள் குடும்பத்திற்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் இருந்ததால், தன் தங்கையை மறுமணம் செய்து கொள்ளும்படி சுதர்மாவை வற்புறுத்தினாள். முதலில், சுதர்மா மறுத்தாலும் இறுதியில், அவர் தனது மனைவியின் வற்புறுத்தலுக்கு அடிபணிய வேண்டியிருந்தது. தனது மனைவியின் தங்கை குஷ்மாவை மணந்து வீட்டிற்கு அழைத்துவந்தார்.

குஷ்மா மிகவும் அடக்கமான மற்றும் நல்லொழுக்கமுள்ள பெண். அவள் தீவிர சிவபக்தை. ஒவ்வொரு நாளும் 101 சிவலிங்கம் மண்ணால் செய்து வழிபடுவாள். அதனை நீரில் கரைத்துவிடுவாள்.

அவள் சிவபக்தியால் கருவுற்றாள். அவள் வயிற்றில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் சுதேஹா, குஷ்மா இருவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் விதிவசத்தால், சில காலங்களுக்கு பிறகு மூத்தவளான சுதேஹாவின் மனதில் கெட்ட எண்ணம் பிறந்தது. தனக்கு அந்த வீட்டில் மதிப்பு எதுவும் இல்லை என்று அவளாக நினைத்தாள். சுதேஹாவின் மனதின் தீய எண்ணம் பெரிய மரமாக உருவெடுத்திருந்தது. “அவள் என் கணவரின் கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டாள். குழந்தையும் அவளுடையதுதான்.”

இந்த தீய எண்ணம் அவள் மனதில் வளர, குஷ்மாவின் குழந்தையும் வளர்ந்து கொண்டிருந்தது. அவனுக்கும் திருமணம் நடந்தது. பொறாமையின் உச்சத்தில் மனம் பேதலித்து, ஒரு நாள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுதேஹா, குஷ்மாவின் இளம் மகனைக் கொன்றாள். குஷ்மா எந்த நீர் நிலையில் தினமும் சிவலிங்கங்களை விசர்ஜனம் செய்வாளோ, அதே நீர்நிலையில் (குளத்தில்) அவனுடைய உடலை எறிந்தாள். காலையில் அனைவருக்கும் விஷயம் தெரிந்தது. வீடு முழுவதும் குழப்பம் நிலவியது. சுதர்மாவும் மருமகளும் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தனர்.

ஆனால் குஷ்மா ஒன்றும் நடக்காதது போல் வழக்கம் போல் உறுதியான மனதோடு சிவ வழிபாட்டில் மூழ்கி இருந்தாள். பூஜையை முடித்துவிட்டு, சிவலிங்கத்தை குளத்தில் விடுவதற்காகப் புறப்பட்டாள். அவள் குளத்திலிருந்து திரும்பத் தொடங்கியபோது, அவளுடைய அன்பு மகன் குளத்தின் உள்ளே இருந்து வெளியே வருவது தெரிந்தது. வழக்கம் போல் வந்து குஷ்மாவின் காலில் விழுந்தான். அப்போது அவள் சிவபக்தியையும், மன உறுதியையும் மெச்சிய சிவனும் அங்கே தோன்றி குஷ்மாவிடம் வரம் கேட்கச் சொன்னார். சுதேஹாவின் இந்த செயலால் சிவன் கோபமடைந்து திரிசூலத்தால் அவள் கழுத்தை அறுக்க எண்ணியபோது, குஷ்மா தன் கைகளைக் கூப்பி சிவனிடம் பிரார்த்தனை செய்தாள் – `பிரபு! நீங்கள் கருணாமூர்த்தி. புத்தி பேதலித்து என்ன செய்கிறோம் என்றறியாத துரதிர்ஷ்டவசமான என் சகோதரியை மன்னியுங்கள். அவள் ஒரு பயங்கரமான பாவம் செய்தாள்.

ஆனால் உன் கிருபையால் நான் என் மகனைப் பெற்றேன். அவளை மன்னித்துவிடுங்கள். அதோடு எனக்கு இன்னும் ஒரு பிரார்த்தனை உள்ளது. மக்கள் நலனுக்காக, நீங்கள் இந்த இடத்தில் என்றென்றும் தரிசனம் தர வேண்டும்.’ என்றாள். அவள் தன்னலமற்ற வேண்டுகோளை சிவன் ஏற்றுக் கொண்டார். ஜோதிர்லிங்க வடிவில் தோன்றினார். சிவ பக்தரான குஷ்மா வழிபட்டதால், அவர் இங்கு குஷ்மேஷ்வர் மகாதேவ் என்று அழைக்கப்பட்டார்.

எப்படிச் செல்வது?

ஔரங்காபாத் ரயில் நிலையம் அருகில் உள்ள முக்கிய ரயில் நிலையமாகும். இங்கிருந்து கோயில் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. டாக்சிகள், ஆட்டோ ரிச்சாக்கள் மற்றும் பேருந்துகள் நிலையத்திலிருந்து கோயிலுக்கு இயக்கப்படுகின்றன. கிரிஷ்னேஷ்வர் ஆலயம் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அவுரங்காபாத் மற்றும் கோயிலுக்கு இடையே வழக்கமான அரசு போக்குவரத்து பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சாலை வசதி நன்றாக உள்ளது. எல்லோரா குகைகளுக்கு அருகாமையில் இருப்பதால், பல சுற்றுலாப் பயணிகள் ஒரே பயணத்தில் இரு இடங்களுக்கும் செல்ல விரும்புகின்றனர்.

கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் என்பது இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் வெருல் கிராமத்தில் அமைந்துள்ளது. இது 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாகும். இந்த ஆலயம் எல்லோரா குகைகளிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில், அவுரங்காபாத் நகரின் வடமேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிரிஷ்னேஷ்வர் ஆலயம் பற்றி சிவபுராணம், ஸ்கந்த புராணம், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயில் திறக்கும் நேரம்

கோயில் வழக்கமாக காலை 5:30 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 9:30 மணிக்கு மூடப்படும். இருப்பினும், சிறப்புச் சந்தர்ப்பங்கள் மற்றும் திருவிழாக்களில் நேரங்கள் வேறுபடலாம். மஹாசிவராத்திரி தினத்தில் பக்தர்கள் அலை அலையாக வந்து தரிசனம் செய்வார்கள். இங்கு கர்ப்பகிரகத்தில் உள்ள சிவபெருமானை நாமே அபிஷேகம் செய்யலாம். விபூதி, குங்குமம், வில்வம், சந்தனம் மற்றும் சுத்தமான நீரால் ஈசனின் மனம் குளிர அபிஷேகம் செய்யலாம். உலர் பழங்கள் நிவேதனம் செய்யலாம். அருகில் பார்க்க வேண்டிய இடங்கள் எல்லோரா குகைகள், அஜந்தா குகைகள், அவுரங்காபாத் குகைகள் என உள்ளது.

ஒரே பயணத்தில் 7 ஜோதிர் லிங்கங்கள்

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில், 7 ஜோதிர்லிங்கங்கள் அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளதால், ஒன்றாக தரிசிக்க முடியும்.

இந்த 7 ஜோதிர்லிங்கங்கள்:

*சோம்நாத் ஜோதிர்லிங்க, குஜராத்.
*நாகேஷ்வர் ஜோதிர்லிங்க, துவாரகா.
*திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்க, நாசிக்.
*பீமாசங்கர் ஜோதிர்லிங்க, புனே.
*கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்க, அவுரங்காபாத்.
*மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்கம், உஜ்ஜைனி.
*ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்க, கந்தா.
இவை அனைத்தையும் ஒன்றாகப் பார்ப்பது மிகவும் எளிதானது மற்றும் வசதியானது.

The post கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம், அவுரங்காபாத் appeared first on Dinakaran.

Read Entire Article