கிராமப்புறங்களை குறி வைக்கும் போதை கும்பல்கள் கஞ்சா போதையில் சாலையில் கிடக்கும் இளம் சிறார்கள்

3 days ago 3

*பள்ளி மாணவர்கள் வலையில் விழுந்த அவலம்

ஆரல்வாய்மொழி : கிராமப்புறங்களை குறி வைத்து கஞ்சா போதை கும்பல் விற்பனையை நடத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் பலர் போதைக்கு அடிமையாகி ரோட்டோரங்களில் கிடப்பது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவுப்படி காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

காவல்துறை நடவடிக்கையால் கஞ்சா விற்பனை கும்பல்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு விற்பனையை மாற்றி இருக்கிறார்கள். குறிப்பாக கல்விக்கூடங்களை அதிகளவில் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

இது மட்டுமின்றி செங்கல் சூளை தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்களையும் வியாபாரிகளாக மாற்றி வருகிறார்கள். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை வட மாநிலத்தவர்கள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை செங்கல் சூளைகள், எஸ்டேட்கள் , வலை கம்பெனிகளில் தான் அதிகளவில் வட மாநிலத்தவர்கள் இருந்தனர். அவர்களின் வருகையும் கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது.

சாதாரண டீ கடையில் இருந்து பெரிய, பெரிய வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள், நகை கடைகள் என வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு வந்துள்ள வட மாநில தொழிலாளர்களின் போர்வையில் கஞ்சா விற்பனை செய்பவர்களும் ஊடுருவி உள்ளனர்.

இவர்கள் ரயில்களில் சாதாரணமாக கஞ்சாவை கொண்டு வந்து சப்ளை செய்கிறார்கள். நெல்லை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கஞ்சா விற்பனைக்காக குமரி மாவட்டத்துக்குள் ஊடுருவி உள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களை குறி வைத்து கஞ்சாவை பரப்பி வருகிறார்கள். அந்த வகையில், ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், தாழக்குடி போன்ற பகுதிகளில் செயல்படுகின்ற பள்ளி, கல்லூரிகளை சுற்றி கஞ்சா கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அந்தந்த பள்ளி, கல்லூரிகளின் சீருடை அணிந்து கொண்டு காவல்துறை, கல்வி கூட நிர்வாகத்துக்கு எந்த வித சந்தேகமும் ஏற்படாத வகையில் மாணவர்களிடம் கஞ்சா பழக்கத்தை விதைத்து அவர்களை சீரழிப்பதுடன், அவர்கள் மூலம் மற்ற மாணவர்களையும் பழக்கத்துக்கு உள்ளாக்கி வருகிறார்கள்.

தற்போது மேற்கண்ட கிராம பகுதிகளில் மித மிஞ்சிய கஞ்சா போதையில் மாணவர்கள், சாலைகளில் மயங்கி கிடக்கும் அவல நிலையை பார்க்கும் போது பொதுமக்களின் நெஞ்சம் பரிதவிக்கிறது. பள்ளி, கல்லூரி பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து சரிவர இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் போலீசாரின் ரோந்து பணிகள், கண்காணிப்புகளில் சிக்காமல் கஞ்சா எளிதில் கைமாற்றும் வேலைகள் நடக்கின்றன. கிராமப்புறங்களில் அதிகளவில் ஆள் நடமாட்டம் இருக்காது.

கண்காணிப்பு கேமராக்கள் போன்ற நவீன கருவிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும். இவை தான் கிராமப்புறங்களை நோக்கி கஞ்சா வியாபாரிகளை திருப்பி உள்ளது. எளிதில் ஒரு மாணவனை வசமாக்கி அவனுக்கு அளவுக்கு அதிகமாக பண நடமாட்டத்தினை ஏற்படுத்தி தங்கள் வழிக்கு கொண்டு வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்துகிறார்கள்.

வட மாநில தொழிலாளர்கள் அதிகளவு கஞ்சாவை பயன்படுத்துகின்ற காரணத்தை வைத்து வட மாநில தொழிலாளர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் எங்கெல்லாம் வட மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்களோ அவர்களை தொடர்பு கொண்டு எந்தவித சந்தேகமும் ஏற்படாதவாறு சர்வ சாதாரணமாக தங்களுடைய விற்பனையை கஞ்சா கும்பல் செய்து வருகிறது. மொத்த டீலர்கள் யாரும் இதுவரை சிக்குவதில்லை.

அவ்வப்போது காவல்துறை 5 கிராம், 10 கிராம், 20 கிராம், 50 கிராம் என சொற்ப அளவில் தான் கஞ்சாவை பிடிக்கிறார்கள். காவல் துறையின் கெடுபிடியால் கஞ்சா விலை தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. 5 கிராம் கஞ்சா கூட, ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது.

ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் போதிய போலீசார் இல்லை. இதனால் பல்வேறு கிராமங்களுக்கு காவல் துறை செல்வது கூட கிடையாது. பள்ளி, கல்லூரி தொடங்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் அந்த பகுதிகளில் கண்காணிப்பு இல்லை. பெரும்பாலான பகுதி மலையோர கிராமங்களாக இருப்பதால், கஞ்சா கைமாற்றம் செய்யவும் வசதியாக உள்ளது.

ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் கடந்த இரண்டரை மாதங்களில் 15 க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவாகி உள்ளன. கஞ்சா பழக்கத்தால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.

எனவே அந்தந்த பகுதி காவல் நிலைய காவல் அதிகாரிகள் காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சிறு, சிறு துரும்புகளை பிடித்து கணக்கில் சேர்க்காமல், மொத்த டீலர்கள் யார்? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கஞ்சா கும்பல்களுக்குள் இருக்கும் தொடர்பு சங்கிலியை உடைக்கும் முயற்சியை மேற்கொண்டு, இவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள் ஆகும்.

கடந்த ஆண்டு 110 வழக்குகள்

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த ஆண்டு 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 120 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டும் எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனை தொடர்பாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் போதை ஒழிப்பு குழு

குமரி மாவட்டத்தில் கல்லூரிகளில் போதை ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து வருகிறார்கள். பள்ளிகளிலும் இது போன்ற குழுக்களை ஏற்படுத்தும் வகையில் கல்வித்துறையுடன், மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து நடவடிக்கை மேற்ெகாள்ள வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் இருந்து தகவல்களை பெறும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

தகவல் தெரிவிக்கும் வகையில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கையை காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும் . மேலும் கவுன்சிலிங் குழுக்கள் உருவாக்கப்பட்டு பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நல்லுறவு விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

குண்டர் சட்டத்தில் கைது

எஸ்.பி. ஸ்டாலின் கூறுகையில், போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போதை பொருள் விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் 81222 23319 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் .

அனைத்து இடங்களில் இந்த எண்கள் வைக்கப்பட்டு உள்ளது. போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள் என்றார்.

The post கிராமப்புறங்களை குறி வைக்கும் போதை கும்பல்கள் கஞ்சா போதையில் சாலையில் கிடக்கும் இளம் சிறார்கள் appeared first on Dinakaran.

Read Entire Article