கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 7% குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை கிடைக்கிறது: காங். குற்றச்சாட்டு

1 day ago 1

புதுடெல்லி: கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கொண்ட லிப்டெக் இந்தியா நிறுவனம் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் தற்போதை நிலை தொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கையில் கூறியிருப்பதாவது: லிப்டெக் அறிக்கை 100 நாள் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள பல முக்கியமான இடைவெளிகளை ஆவணப்படுத்துகிறது. பிரதமர் மோடியின் அக்கறையற்ற அணுகுமுறை மற்றும் குறுகிய பார்வையின் ஆதாரமாக கடந்த 2015ல் நாடாளுமன்றத்தில் இத்ததிட்டத்தை அவர் கேலி செய்தார்.

ஆனால் கொரோனா காலத்தில் அரசு செயல்படுத்தக்கூடிய சில சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஒன்றாக 100 நாள் வேலை திட்டம் அதன் பயன்பாட்டை உறுதியாக நிரூபித்தது. 2019-20ம் ஆண்டில் மொத்தம் 6.16 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்த நிலையில், 2020-21ல் இந்த எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்து 8.55 கோடியாக அதிகரித்தது. இந்த கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு அரசின் திட்டமிடப்படாத ஊரடங்குகளின் குழப்பங்களுக்கு மத்தியில் 100 நாள் வேலை திட்டமட்டம் மட்டுமே உயிர்நாடியாக இருந்தது.

ஆனால் இன்று 2024-25க்கான பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு மோடி அரசு ரூ.86,000 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இது போதுமானதாக இல்லை. மக்கள் வேலைவாய்ப்பு உத்தரவாத நடவடிக்கை அமைப்பு 2022-23ம் நிதியாண்டிலேயே இத்திட்டத்திற்கு ரூ.2.64 லட்சம் கோடி நிதி ஒதுக்க பரிந்துரைத்தது. உலக வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 1.7 சதவீதத்தை இத்திட்டத்திற்கு ஒதுக்க பரிந்துரைத்தது. ஆனால் தற்போதைய ஒதுக்கீடு ஜிடிபியில் வெறும் 0.26 சதவீதம் மட்டுமே. இதனால் இத்திட்டத்தில், 7 சதவீத குடும்பங்களுக்கு மட்டுமே உறுதி அளிக்கப்பட்டபடி 100 நாட்கள் வேலை கிடைக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களில் 8.6 சதவீதம் உயர்வு இருந்தபோதிலும், 202425ம் ஆண்டில் வேலைவாய்ப்பு 7.1 சதவீதம் குறைந்துள்ளதாக லிப்டெக் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சராசரி வேலை நாட்கள் 4.3 சதவீதம் குறைந்துள்ளதாகவும், 100 நாள் நிறைவு பெற்ற குடும்பங்கள் 11.9 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இத்திட்டத்தின் வழங்கும் ஒருநாள் சம்பளம் ரூ.400 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். ஆதார் அடிப்படையிலான ஊதிய வழங்கல்கள் கட்டாயமாக்கப்படக்கூடாது. 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும், தாமதம் ஏற்பட்டால், அதை ஈடுசெய்யப்பட வேண்டும். மேலும் வேலை நாட்களின் எண்ணிக்கையை 100ல் இருந்து 150 நாட்களாக அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 7% குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை கிடைக்கிறது: காங். குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article