கிராம சபை கூட்டங்கள் உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி

2 weeks ago 3

மதுரை,

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த குருநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் கிராம மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதும், கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது குறித்து, கூட்டம் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக, ஒவ்வொரு ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களிலும் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதும் விதிமுறை. அதேபோல கிராம சபை கூட்டம் நடைபெறும்போது, கிராம மக்கள் ஏகமனதாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அதை ஏற்க வேண்டும். கூட்டத்தில் நடைபெறும் இந்த பணிகளை அந்த பகுதி தாசில்தார் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

இந்த நடைமுறையை பின்பற்றுவது சம்பந்தமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவை அதிகாரிகள் இதுவரை முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை முறையாக செயல்படுத்தாத தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டீக்காராமன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அனைத்து கிராம சபை கூட்டங்களும் உரிய விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா? என்பதை அந்தந்த பகுதி தாசில்தார்கள் ஆய்வு செய்கிறார்களா? என கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Read Entire Article