கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு: மக்களின் துயரத்தை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை - செல்வப்பெருந்தகை

19 hours ago 4

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் 50 ரூபாய் விலை உயர்த்தப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி இன்று அறிவித்துள்ளார். விலை உயர்வு அடிப்படையில் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் தற்போது ரூ.820 என்ற அளவில் உயர்ந்துள்ளது. தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான கியாஸ் சிலிண்டர் விலையை இன்று ரூபாய் 50 என்ற அளவில் உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது மத்திய பா.ஜ.க. அரசு.

மேலும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், கியாஸ் சிலிண்டர் விலையையும் மத்திய பா.ஜ.க. அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article