கிண்டி ராஜ்பவன் பாதுகாப்பு பணிக்கு சென்றபோது நந்தம்பாக்கம் சாலையில் சிஐஎஸ்எப் வீரர் தவறவிட்ட ஏ.கே.47 துப்பாக்கி, 30 தோட்டாக்கள் மீட்பு: போலீசிடம் ஒப்படைத்த தாம்பரம் வாலிபருக்கு பாராட்டு

3 months ago 8

சென்னை: ராஜ்பவன் பாதுகாப்பு பணிக்கு சென்றபோது ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் நந்தம்பாக்கம் பகுதியில் சாலையில் தவறவிட்ட ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களை மீட்டு வாலிபர் ஒருவர் போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் நடந்த விசாரணையை தொடர்ந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீண்டும் ஒன்றிய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை கிழக்கு தாம்பரம் மோதிலால் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்நத்வர் சிவராஜ் (34).

இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பணி முடிந்து போரூரில் இருந்து தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். நந்தம்பாக்கம் மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே வரும் போது, சாலையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கிடந்தது. இதைப் பார்த்த சிவராஜ், உடனே தனது பைக்கை நிறுத்தி அந்த துப்பாக்கியை எடுத்தார். முதலில் அவர் சினிமா படப்பிடிப்புக்கான பொம்மை துப்பாக்கியாக இருக்கும் என்று நினைத்து சாலையோரம் வீசலாம் என்று முடிவு செய்தார்.

ஆனால் அந்த துப்பாக்கி மிகவும் கனமாகவும், ஒரிஜினல் தோட்டாக்கள் இருந்ததையும் உணர்ந்த அவர், உடனே 100க்கு தகவல் கொடுத்து அருகில் உள்ள ராமாபுரம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை வாங்கி, தகவல் கொடுத்தார். பிறகு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சிவராஜ் ராமாபுரம் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த போலீசாரிடம், சாலையில் கிடந்ததாக ஒப்படைத்தார். துப்பாக்கியை பார்த்ததும் போலீசார் சற்று அச்சமடைந்தனர்.

இது ஏ.கே.47 வகையை சேர்ந்த துப்பாக்கி என்றும் துப்பாக்கி லோடு செய்யப்பட்டிருந்ததும் கண்டுபிடித்தனர். நல்வாய்ப்பாக சிவராஜ் துப்பாக்கியின் விசையை அழுத்தாமல் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார். ஒரு வேலை சினிமா மொம்மை துப்பாக்கி என்று அதன் விசையை அவர் அழுத்தி இருந்தால் உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று தெரிவித்தனர். பிறகு அவரது நேர்மையை காவல் நிலையத்தில் இருந்த போலீசார் பாராட்டினர்.

அதனை தொடர்ந்து சாலையில் கீழே கிடந்த ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் யாருடையது என்று போலீசார் விசாரணை நடத்தியதில், அவை, சென்னை கிண்டியில் உள்ள அமைந்துள்ள ராஜ்பவன் பாதுகாப்பு பணி மேற்கொண்ட ஒன்றிய ரிசர்வ் பாதுகாப்பு படை 77வது அணியை சேர்ந்த வீரரான அன்னப்பு லட்சுமிரெட்டி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

வீரர் அன்னப்பு லட்சுமிரெட்டி நேற்று முன்தினம் பூந்தமல்லி ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை முகாமில் இருந்து ராஜ்பவன் பாதுகாப்பு பணிக்கு வாகனத்தில் செல்லும் போது சாலையில் தவறவிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆவணங்களை சரிபார்த்து அவரிடம் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நேற்று ஒப்படைத்தனர். சாலையில் ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கிடந்த சம்பவம் நந்தம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கிண்டி ராஜ்பவன் பாதுகாப்பு பணிக்கு சென்றபோது நந்தம்பாக்கம் சாலையில் சிஐஎஸ்எப் வீரர் தவறவிட்ட ஏ.கே.47 துப்பாக்கி, 30 தோட்டாக்கள் மீட்பு: போலீசிடம் ஒப்படைத்த தாம்பரம் வாலிபருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article