காஸ்மடிக் அக்குபஞ்சர் சிகிச்சை!

1 week ago 4

நன்றி குங்குமம் டாக்டர்

அக்குபஞ்சர் மருத்துவர் ஐஸ்வர்யா

சமீபகாலமாகவே மக்கள் பலரும் பல உடல் நல பிரச்னைகளுக்கு மருந்தில்லா மாற்று மருத்துவத்தை நாடத் தொடங்கியுள்ளனர், அந்தவகையில், அக்குபஞ்சர் மருத்துவமும் ஒன்று. சென்னை, மந்தைவெளியில் அமைந்துள்ள டாக்டர். ஐஸ்வர்யாஸ் நேச்சர் க்யூர் சென்டர் மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் ஐஸ்வர்யா, அக்குபஞ்சர் மருத்துவம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

அக்குபஞ்சர் மருத்துவம் என்பது பாரம்பரிய சீன மருத்துவமாகும். நமது உடலில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளை தூண்டிவிடும் வகையில், மெல்லிய சிறு குத்தூசிகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறையாகும். இதில் எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்தலாம். குறிப்பாக, வாழ்வியல் நோய்கள் என்று சொல்லப்படும் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு மாதவிடாய் பிரச்னை, குழந்தையின்மை, தலைவலி, சரும பிரச்னைகள், அலர்ஜி, சொரியாசிஸ், எக்சிமா, கழுத்துவலி, முதுகுவலி, மூட்டுவலி, தூக்கமின்மை, மனம் சார்ந்த நோய்கள், படபடப்பு, மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியும்.

அக்குபஞ்சர் மருத்துவத்தில் பல வகைகள் உள்ளன. அது அந்த புள்ளிகளை தேர்ந்தெடுக்கும் விதத்தில் வேறுபடும். அவற்றில், உடல் அக்குபஞ்சர், மைக்ரோசிஸ்டம் அக்குபஞ்சர், மின்சார அக்குபஞ்சர், லேசர் அக்குபஞ்சர், மாக்ஸிபஸ்ஷன், அக்குபிரஷர், காஸ்மடிக் அக்குபஞ்சர் போன்றவை முக்கிய வகைகளாகும். அதில் காஸ்மடிக் அக்குபஞ்சர் சிகிச்சையில் வேறெங்கும் இல்லாத வகையில் நாங்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம்.

காஸ்மடிக் அக்குபஞ்சர் என்பது அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அல்லவா அது போன்றது. நமது உடலில் ஏதேனும் பிரச்னை இருந்தால், அது முதலில் முகத்தில்தான் பிரதிபளிக்கும். எனவேதான் அவ்வாறு கூறியுள்ளனர். இதற்கு, நமது உள் உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளை பிராணசக்தியை தூண்டிவிட்டு எனர்ஜியை சரி செய்வதன் மூலம் வெளித்தோற்றத்தை சரி செய்ய முடியும். இதுதான் காஸ்மடிக் அக்குபஞ்சர் ஆகும். உதாரணமாக, கண் கருவளையம் தொடங்கி முகத்தில் கருமை, முகப்பரு, முடி கொட்டுத்தல் போன்ற பல பிரச்னைகளை சரி செய்ய முடியும்.

இந்த காஸ்மடிக் அக்குபஞ்சர் சிகிச்சையில், கப்பிங் சிகிச்சை என்ற மற்றொரு வகையும் உண்டு. இது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் கப்களை கொண்டு ஒரு வெற்றிடத்தை உருவாக்கி அதை தசைகளில் பிடித்து வைத்து அழுத்தம் கொடுக்கும் சிகிச்சை ஆகும். உதாரணமாக, சிலருக்கு வயது முதிர்வு காரணமாக முகத்தில் சதைகள் தொங்கியிருக்கும். அல்லது உடல் எடை குறைந்து முகத்தில் சதைகள் தொங்கும். இந்நிலையில், தளர்ந்து தொங்கும் சதைகளை இறுக்கமடையச் செய்து மீண்டும் முகத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவதோடு முகத்திற்கு ஒரு பொலிவையும் கொடுக்கும்.

அதுபோன்று இளம் வயதினர் முதல் முதியவர் வரை பரவலாக காணப்படும் பிரச்னை முடி உதிர்தல் ஆகும். அதற்கு, இந்த சிகிச்சை முறை நல்ல பலனை தரும். இதற்காக, பிரத்யேக எண்ணெய்களை தயாரித்து அதைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் நல்ல தீர்வு கொடுத்து வருகிறோம். இந்த சிகிச்சைகளை பொருத்தவரை, அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு ஆரம்ப நிலையில் இருக்கிறதோ அல்லது நாள்பட்ட பிரச்னையோ அதற்கு தகுந்தவாறு கால அளவு எடுத்துக் கொள்ளும். மேலும், இந்த காஸ்மடிக் சிகிச்சைக்கு வயது வரம்பும் ஏதுமில்லை. யார் வேண்டுமானாலும் இந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக, அக்குபஞ்சர் முறையில், உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஆங்காங்கே புள்ளிகள் இருக்கும். அந்த புள்ளிகளை தூண்டிவிடும்போது, நமது உடலில் உள்ள பிரச்னைகள் சரியாகிவிடும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், நமது உள்ளங்கை, உள்ளங்கால்களில் இருக்கும் புள்ளிகளை தூண்டி அழுத்தம் கொடுக்கும்போது, உள் உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டு பிரச்னைகள் சரியாகும்.

அதுபோன்று மாக்ஸிபஸ்ஷன்(moxibustion) சிகிச்சையில் குறிப்பிட்ட மூலிகையை காய வைத்து இதை உருட்டி பற்ற வைப்பதன் மூலம் வரும் வெப்பம் மற்றும் புகையின் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறையாகும். நாள்பட்ட பல பிரச்னைகளுக்கு இந்த சிகிச்சை முறை நல்ல தீர்வு தரும். அதுபோன்று மின்சார அக்குபஞ்சரில் எலக்ட்ரிக்கல் ஸ்டிமுலேஷன் என்ற முறையும் இருக்கிறது. நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சையில் புள்ளிகளுக்கு கூடுதல் அழுத்தம் தேவைப்படும். அதற்காக, மின் அதிர்வுகளை கொடுத்து சிகிச்சை கொடுக்கும்போது, தீர்வும் விரைவில் கிடைக்கும்.

சிலருக்கு உதட்டிற்கு பக்கத்தில், மூக்கிற்கு அருகில் சருமம் கருமை படர்ந்து காணப்படும். இதற்கு நிறைய க்ரீம் வகைகளை முயற்சி செய்து பார்த்திருப்போம். ஆனால், தீர்வு கிடைத்திருக்காது. காரணம், இதற்கான தீர்வு என்பது உடலின் உள் பகுதியில் இருக்கிறது. அதை சரி செய்தால்தான் அந்த பிரச்னை சரியாகும். அதற்கும் இந்த மருத்துவத்தில் தீர்வு காணமுடியும்.

The post காஸ்மடிக் அக்குபஞ்சர் சிகிச்சை! appeared first on Dinakaran.

Read Entire Article