
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் இங்கு சுற்றுலா வருவார்கள். இந்த நிலையில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியபயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், "பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமைதியும், வலிமையும் கிடைக்க வேண்டும். இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.