
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (22.04.2025) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். காயமடைந்த 17 பேரும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சூழலில் பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி இன்று மாலை 6 மணிக்கு மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க., காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "பஹல்காம் தாக்குதல் தொடர்பாக எங்கள் கண்டனத்தை பதிவு செய்தோம். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் முழு ஆதரவை தெரிவித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "எதிர்க்கட்சிகள் சார்பில் அரசுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளோம். ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து அமைதி நிலவ நடவடிக்கை தேவை என வலியுறுத்தினோம்" என்று தெரிவித்தார்.
டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் பேசிய ஏ.ஐ.எம்.எம். (AIMIM) தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி, "பஹல்காம் தாக்குதலில் மத்திய அரசு எடுக்கும் முடிவை ஆதரிப்போம். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாட்டின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும் வான், கடல் வழி தற்காப்பு தடுப்பு நடவடிக்கை எடுக்க சர்வதேச சட்டம் அனுமதிக்கிறது.
பைசரன் புல்வெளியில் CRPF ஏன் நிறுத்தப்படவில்லை?... காஷ்மீரிகள் மற்றும் காஷ்மீர் மாணவர்களுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்... பயங்கரவாதிகள் அவர்களின் மதத்தைப் பற்றிக் கேட்டு மக்களைக் கொன்ற விதத்தை நான் கண்டிக்கிறேன்... சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகவும் நல்லது, ஆனால் தண்ணீரை எங்கே வைத்திருப்போம்?... மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம்... இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல" என்று அவர் கூறினார்.