
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற, பயங்கரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்தவுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி மையம் தொடங்குவதற்கு உத்தரவிட்டு, அதன்படி உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
மேலும், காஷ்மீர் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி, பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உரிய உதவிகளை செய்திட புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூலை நேரடியாக ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு அவர் அப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி டாக்டர் பரமேஸ்வரனுக்கு அம்மாநிலத்தில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் இன்று மதியம் டெல்லி வந்தடைந்த அவரை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையர் ஆஷிஷ் குமார், ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டாக்டர் பரமேஸ்வரனின் மனைவி டாக்டர் நயன்தாராவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அவரது கணவரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்து, தமிழ்நாடு அரசு மூலம் தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது முதல்-அமைச்சரின் துரிதமான நடவடிக்கைக்கு டாக்டர் நயன்தாரா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 நபர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு நேற்று ரெயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை அழைத்து வரும் பணிகள் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.