
ஈரோடு மாவட்டம் கடத்தூர் கோபி குப்பாண்டார் வீதியைச் சேர்ந்தவர் தனசேகர் (49 வயது). இவருக்கு பிரியா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனசேகர் கூட்டுறவு வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு பணியை விட்டு விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பின்னர் வீட்டில் இருந்த அவர் முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெற்றதை நினைத்து மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. அவசரப்பட்டு விருப்ப ஓய்வு முடிவை எடுத்ததாக அக்கம்பக்கத்தினர், நண்பர்கள், உறவினர்களிடமும் புலம்பிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த தனசேகர் அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். அதைக்கண்ட மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது தனசேகர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.