ஸ்ரீநகர்,
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியையொட்டி அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், குளிர்காலம் தொடங்கவுள்ள சூழலில், பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளனர் என ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுபற்றி எல்லை பாதுகாப்பு படையின் ஐ.ஜி. அசோக் யாதவ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, எல்லையில் தொடர்ந்து ஊருடுவல் முயற்சிகள் நடந்து வருகின்றன. பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில், ராணுவத்துடன் ஒருங்கிணைந்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்.
எல்லை பகுதியில் 130 முதல் 150 பயங்கரவாதிகள் வரை ஊடுருவ தயாராக இருக்கின்றனர் என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது சற்றே அதிகம் என்றாலும், எந்தவித ஊருடுவல் முயற்சிகளையும் பாதுகாப்பு படையினர் முறியடித்து விடுவார்கள் என்றார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ந்தேதி நடந்தது. சவாலான சூழலில், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இதுபற்றி குறிப்பிட்ட அசோக், பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்தபோதும், எந்தவித தாக்குதலையும் தடுக்கும் வகையில், போலீசார் மற்றும் அரசு நிர்வாகத்துடன் இணைந்து, பாதுகாப்பு படையினர் செயல்பட்டு, நேர்மையான மற்றும் அமைதியான முறையில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.