
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களேஸ்வரி உடனுறை மங்கள நாதர் சுவாமி கோவில் உள்ளது. உலகின் முதல் சிவாலயமாக கருதப்படும் இந்த ஸ்தலத்தில் மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
மேலும் இங்குள்ள மரகத நடராஜருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா நாளன்று சந்தனம் களையப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வார்கள்.
இதுபோன்று பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு உள்ள இந்த கோவிலில் பலகோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் இன்று (4-ந்தேதி) நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. நேற்று வரை ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற்றன. விழாவில் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மங்களநாதர்-மங்களேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம் அதனைத் தொடர்ந்து ஆறாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
காலை 9 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாகசாலையில் இருந்து புனித நீர் உள்ள கும்பத்துடன் வலம் வந்தனர். சரியாக 9.30 மணிக்கு மங்களநாதர்-மங்களேஸ்வரி கோவில் ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி மரகத நடராஜர் சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் இன்று இரவு மரகத நடராஜருக்கு 32 வகையான திரவ பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மீண்டும் சந்தனம் பூசப்பட்டு நடை சாத்தப்படும். அதன் பின் ஆருத்ரா நாளன்று மரகத நடராஜர் சன்னதி திறக்கப்படும்.