தூத்துக்குடி, ஏப்.26: கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கடலோர பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் உருவாக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ஆபரேசன் ரக்சக், ஆபரேசன் சுரக்சா, ஆபரேசன் பேரிகார்டு, ஆபரேசன் ஹம்லா, ஆபரேசன் சாகர் கவாச் போன்ற பெயர்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று மாதம்தோறும் ஆபரேசன் சஜாக் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிது. அதன்படி நேற்று ஆபரேசன் சஜாக் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் கடலோர காவல்படையினர், கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் கடலில் ரோந்து சென்றனர். அப்போது, படகுகளில் சந்தேகப்படும் படியாக யாரும் உள்ளார்களா?, படகில் உள்ளவர்களின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினர். தொடர்ந்து தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளிலும் சோதனை நடத்தினர்.
The post காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தூத்துக்குடி கடல் பகுதியில் மரைன் போலீசார் கண்காணிப்பு appeared first on Dinakaran.