பகுதி 1
தன் மூச்சில் கலந்து விட்ட நாராயணனே, தான் அடுத்து நிகழ்த்தவிருக்கும் ராமாவதாரத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டதில், நாரதருக்கு சந்தோஷம் தாங்க முடியாமல் போயிற்று. யாருக்குமே கிடைக்கப் பெறாத பாக்கியத்தை பெற்ற நாரதருக்கு உடனடியாக யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பேராவல் தோன்றியது.
`நாராயணா… நாராயணா…’ என்று ஜபித்தபடி நாரதர் தேவலோகத்திற்குள் நுழைந்தார். அவர் ராம அவதாரத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ள தேர்ந்தெடுத்தவர் வருணன். வருணனை சென்றடைந்த நாரதர். அவரிடம் ராம அவதாரத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தார். ஆனால் வருணன், தன் குழந்தையுடன் விளையாடுகின்ற மும்முரத்தில், முற்றிலும் கவனமாக கேட்கவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் விவரிக்க, கேட்பவரின் கவனமின்மை, நாரதருக்கு நோய்மையைத் தந்தது. அருமை தெரியாத ஒருவரைத் தேர்ந்தெடுத்தது தனது முட்டாள்தனம் என்று ஒருபுறம் வேதனை. தனக்கு மட்டுமே தெரிந்த, அதுவும் மிகவும் உயர்ந்த, பிரபஞ்சமே உற்று நோக்கப் போகிற, ஒரு அவதாரத்தின் மகிமையை உணராத வருணன் மீது ஆத்திரமும் கோபமும் மற்றொருபுறம்.
“நீயும் உன் புதல்வனும் பிரியக் கடவது.” என சாபமிட்டார். வருணனுக்கு சாபத்தின் வீரியம் புரிந்து மனம் பதைபதைத்தது. எந்நேரமும் நாராயணா என்று நாமம் சொல்லும் தனக்கு ஏன் பொறுமை வாய்க்கவில்லை என்று தன்னைத்தானே நாரதர் நொந்து கொண்டார். “கவலை வேண்டாம் வருணரே! எந்த ராமகாவியத்தை நான் உங்களுக்குச் சொல்லத் துடித்தேனோ அதை உங்கள் மகன்தான் இந்த உலகத்திற்கே காவியமாய் சொல்லப் போகிறான்” என்று ஆசீர்வதித்தார். காலங்கள் உருண்டன. ரத்னாகருக்கு அதிகாலையில் எழுந்து கொள்ளும் பொழுது வலது கண் துடித்தது. அதைக் கண்ட அவன் தாயார் “இன்று உனக்கு நல்ல வேட்டை இருக்கும்” என்று சொன்னதைக் கேட்டு ரத்னாகருக்கு சிரிப்பு வந்தது. தான் செய்வது திருட்டுத் தொழில், அதில் இன்று நல்ல வேட்டை கிடைக்கும் என்று தன் தாயே ஆசீர்வாதம் கூறியது விந்தையாய் இருந்தது. தனக்குள் சிரித்துக்கொண்டான். ஊருக்கும் உறவிற்கும், தன்னை வேடுவனாகவே காட்டிக் கொண்டது அவனுக்கு சந்தோஷம்.
அவனுடைய பெரிய குடும்பம் அவனை வேடுவனாகவே நம்பியது. ரத்னாகருக்கு என்றுமில்லாத ஒரு அதீத உற்சாகம் மனதில் தோன்றியது. துள்ளலான நடையுடன் அவன் காட்டுக்குள் நுழைந்தான். காட்டின் நடுவே ஒரு மரத்தின் பின்னால் மறைந்தபடி காத்திருந்தான். அதே நேரம் நாரதர் ஒரு வணிகனின் வேடம் பூண்டு நாராயண நாமத்தை ஜபித்தபடி நடந்து வந்துகொண்டிருந்தார். பகட்டான ஆடை, கழுத்தில் கைகளில் பொன் ஆபரணங்கள் மின்னின. இடுப்பில் கட்டியிருந்த பொற்காசு மூட்டை சப்தமிட்டது.
ரத்னாகர் இரை தானாகவே தன்னைத் தேடி வந்ததாக எண்ணினான்.
நாரதர் எதிரில் குதித்து நின்றான். “உயிர் முக்கியம்தானே உனக்கு. எல்லாவற்றையும் கொடுத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடு.”“முடியாது திருடுவது பாவம் என்பதை நீ அறிய மாட்டாயா? கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.”“பாவமாவது புண்ணியமாவது. என் குடும்பத்தில் என்னையும் சேர்த்து பதினாறு பேர்.
அத்தனை பேரும் பட்டினி கிடப்பது அதைவிட பாவமல்லவா?’’“நீ உழைத்துத்தான் உண்ண வேண்டும். உழைப்பில் வரும் பொருளைக் கொண்டுதான் உன் குடும்பத்தையும் காக்க வேண்டும். அதை விடுத்து கொள்ளை அடிப்பது பாவச் செயல்” என நாரதர் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர் மடியில் வைத்திருந்த மூட்டையைப் பறிக்க எத்தனித்தான்.
“வேண்டாம்… வேண்டாம்… நீ செய்கின்ற பாவச் செயல்கள் உன்னை இம்மையிலும் மறுமையிலும் வாட்டும்.”“அப்படியா! இருந்து விட்டுப் போகட்டும்! இந்தப் பாவச் செயலில் நான் மட்டுமா பலன் பெறுகிறேன்? என் குடும்பத்தினர் அனைவருமே பங்கு வகிக்கிறார்கள். உன் கூற்றுப்படி பாவத்தை நாங்கள் பங்கு பிரித்துக் கொள்கிறோம். எனக்கு ஏதோ கொஞ்சம், அதாவது பதினாறில் ஒரு பங்கு பாவம்தானே வரும், வந்து விட்டுப் போகட்டும். நீ நகைகளைக் கொடுத்துவிட்டுப் போ.”“நீ கொள்ளையடிக்கும் பொருட்களை வேண்டுமானால் பங்கிட்டுக் கொள்வார்கள். ஆனால், உன் பாவத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.”
“நீ அதிகம் பேசுகிறாய். உன் பார்வை, நீ எதைச் சொன்னாலும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்பது போல இருக்கிறது. நீ பேசியது போதும் நிறுத்து.”“நீ வேண்டுமானால், இதோ இந்த மரத்திலேயே என்னைக் கயிற்றினால் இறுகக் கட்டிவிட்டுச் சென்று வா. உன் ரத்தத்தின் ரத்தங்களுடன் பேசிப்பார். யாராவது உன்னுடைய பாவத்தில் பங்கு கொள்ள சம்மதிக்கிறார்களா என்று கேட்டு வா.’’“நீ ஏதோ மந்திரவாதி போல் பேசுகிறாய். என்னை மயக்கப் பாக்கிறாய். என்னைக் குழப்பாதே ஏதோ தந்திரம் செய்து என்னை முட்டாளாக்கப் பார்க்கிறாய்.”
“உன்னை யாரும் முட்டாளாக்க வேண்டாம். இப்பொழுதே, எல்லோரையும் நம்பி நீ முட்டாளாகத்தான் இருக்கிறாய்.” ரத்னாகருக்கு, தான் செய்யும் பாவச் செயல்களுக்காக அனுபவிக்க இருக்கும் விஷயங்களை நாரதர் சொல்லச் சொல்ல கலக்கம் வந்தது. மரத்தில் அவரைக் கட்டினான். ஓட்டமும் நடையுமாக வீட்டை அடைந்தான். தாய், தந்தை, சகோதரர்கள், மனைவி, மக்கள் என எல்லோரையும் அழைத்தான்.
“உங்களிடம் நான் நீண்ட காலமாக மறைத்து வைத்திருந்த ஒரு உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் ஒரு கொள்ளைக்காரன். காட்டினில் வருபவர்களை மிரட்டித் துன்புறுத்தி, களவாடிய பொருள்களைக் கொண்டுதான் இத்தனைக் காலம் நீங்கள் அனைவரும் வாழ்ந்தீர்கள். உங்கள் எல்லோரையும் நன்றாகப் பேண வேண்டும் என்பதற்காக இதைச் செய்தேன்.
வேடுவனாக உழைத்து, என்னால் உங்களை இவ்வளவு செழிப்பாக வைத்துக் கொள்ள முடியவில்லை. இன்று எனக்கு உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. இழி செயல்களால் எனக்கு வந்தடைந்த பாவம் மிகமிக அதிகம். நீங்கள் அதில் பங்கேற்பீர்களா? பாவத்தை பகிர்ந்து கொள்வீர்களா? முடியாது என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்.” அவன் பேசி முடிப்பதற்கு முன்பே அவனது தாய், “தாய், தந்தையைக் காக்க வேண்டியது உன் கடமை அதைத்தான் நீ செய்தாய். நீ எப்படிச் செய்தாய் என்பதைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலை இல்லை. உன் பாவம் உன்னோடு” என்று சொல்லி, தந்தையுடன் நகர்ந்து விட்டாள். மிகுந்த நம்பிக்கையுடன் மனைவியைப் பார்த்தான்.
“தாலி கட்டிய மனைவிக்கு நீ செய்த புண்ணியம் மட்டுமே வந்து சேரும். உன் பாவம் என்னைச் சேராது. இன்னும் சொல்லப்போனால், நான் ஏதாவது பாவம் செய்தால் அதுவும் உன்னைத்தான் வந்து சேரும். இதுதான் உலக நியதி.” எனச் சொல்லி மனைவியும் அவனை விட்டு விலகினாள். பெற்ற பிள்ளைகள், சுற்றம், என அனைவரும் ரத்னாகரை தனியாக விட்டுவிட்டுச் சென்று விட்டார்கள். ரத்னாகருக்குத் துக்கம் பொங்கியது. ஒட்டுமொத்த பாவத்திற்கும் தான் மட்டுமே பொறுப்பு என்ற உண்மை அவனைச் சுட்டது.
பாவத்தினால் விளையப்போகும் நிகழ்வுகளைவிட, தன்னை அண்டி இருந்தவர்கள், தன் மேல் அன்பாய் இருந்ததாகத்தான் நினைத்தவர்கள், எல்லோரும் தன்னை நிராதரவாக விட்டுச் சென்றது மேலும் வலிக்கச் செய்தது. ஓடோடித் திரும்பினான். நாரதரை கட்டியிருந்த கயிற்றினை அவிழ்த்தான். அவரது காலில் விழுந்து வணங்கினான். கண்களில் கண்ணீர் பொங்கியது. கண்களைத் துடைத்தபடியே, “நீங்கள் எனக்கு உண்மையை உணர்த்தி விட்டீர்கள்.
நான் தனியன். இனி எந்தப் பாவச் செயல்களையும் செய்ய மாட்டேன். ஆனால், செய்த பாவச்செயல்களுக்கு எப்படி நான் பிராயச்சித்தம் தேடுவேன்? எனக்கு நீங்கள்தான் ஒரு தீர்வைக் கூறி அருள வேண்டும். உங்களை இப்படி நடத்தியதற்காக என்னை மன்னியுங்கள்.” என இறைஞ்சினான். நாரதருக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. உன்னுடைய பாவங்கள் எல்லாமும் தீர்ந்து போகவும், உனக்கு புண்ணியங்கள் பல கோடி வந்து சேரவும் “ராம நாமம்’’ ஒன்றுதான் வழி.
அது தாரக மந்திரம். தாரகம் என்றால் நம்மைக் காக்க உதவும் என்று பொருள். உனக்கு அந்த மந்திரத்தை உபதேசிக்கிறேன்”. என்று நாரதர் சொல்வதைக் கேட்டு ரத்னாகருக்கு உள்ளம் நெகிழ்ந்தது. நாரதர், ரத்னாகரின் வலது காதினில் ‘ராம.. ராம.. ராம.. ராம… ராம..’ என உச்சரித்தார். ரத்னாகருக்கு, “ராம ராம’’ என்ற நாமத்தை உச்சரிக்க வரவில்லை. தன்னைத் தானே அவன் நொந்து கொண்டான். ‘நாமத்தைச் சொன்னால் புண்ணியம் வரும். ஆனால், அந்த நாமத்தைச் சொல்வதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
நான் வெறும் பாவங்கள்தானே செய்திருக்கிறேன்.’ எனப் புலம்பத் துவங்கினான்.“கவலையை விடு. இதோ இந்த மரத்தை நீ எப்படி “மரா’’ என்று அழைப்பாயோ, அதையே திரும்பத் திரும்பச் சொல். “மரா… மரா.. மரா..’’ என மீண்டும் மீண்டும் சொல்”“மரா.. மரா… மரா..” விரைவில் “ராம.. ராம… ராம..’’ என்று தாரக மந்திரமாக அவன் உச்சரிக்கத் துவங்கினான். நாரதர் அவனது தலையைத் தடவி ஆசீர்வதித்தார்.
“ராம நாம ஜபம்தான் மிகப் பெரிய தவம். முறையுடைய பூஜை நெறிமுறைகள் உனக்குத் தெரிந்திருக்க வேண்டாம். எந்த வேள்விகளும் நீ செய்ய வேண்டிய தேவையில்லை. ஊசி முனைத்தவமோ, நெருப்பில் நின்று கொண்டு தவமோ, தலை கீழ் நின்று கொண்டு தவமோ என உடலையும் மனதையும் வருத்தும் எந்த ஒரு முனைப்பாடுகளும் உனக்குத் தேவையில்லை. நீ இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கும் ராம நாமமே உனக்கு எல்லாவற்றையும் நல்கும்” என்றுகூறி நாரதர் மறைந்தார்.
ரத்னாகருக்கு ராம நாமம் சொல்லச் சொல்ல உள்ளே மாற்றம் ஏற்பட்டது. அவனால் அதை விவரிக்க முடியவில்லை. ஒரு பேரானந்தத்தை அவன் உணர்ந்தான். பசி, தூக்கம் எதுவும் அவனைப் பாதிக்கவில்லை. ராம நாமத்தில் அவன் கரைந்து போனான். அவனுக்கு அப்படி இருப்பது மிகவும் பிடித்திருந்தது.
தன்னைச் சுற்றி நடக்கும் எந்த நிகழ்வுகளும் அவனைச் சிறிதும் சலனப்படுத்தவில்லை. ஆடாமல் அசையாமல் அவன் இருந்ததில், அவன் மேல் புற்று முளைத்தது. வளர்ந்தது. அவனை மூடியும்விட்டது. ராம நாம ஜபம் பூலோகத்தை மட்டுமல்ல, வானுலகிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சப்த ரிஷிகளான அத்ரி, கசியபர், பரத்வாஜர், விசுவாமித்திரர், கௌதமர், ஜமதக்னி, வசிஷ்டர் என அனைவரும் ரத்னாகரின் தவத்தை மெச்சினார்கள்.
வானில் இருந்து பூக்கள் தூவி வாழ்த்தினார்கள். ரத்னாகரின் மேலிருந்த புற்று மண் விலகியது. அசரீரியாக ‘வால்மீகி’ என்று பெயிரிடப்பட்டார். பிரம்மரிஷி என்றும் போற்றப்பட்டார். ஆசிரமம் தோன்றிற்று. நிறைய சீடர்கள் இணைந்தார்கள்.
தன்னுடைய இந்த மாற்றம் ராம
நாமத்தினால் என்பதை வால்மீகி
ஒவ்வொரு கணமும் உணர்ந்தார்.
ராம நாமத்தை தனக்கு அருளிய
நாரதரை மனதுள் பிரார்த்தித்தார்.
நாரதர், ஜடாமுடியுடன் தோற்றம் கொண்ட வால்மீகியின் முன் தோன்றினார்.
“ராம நாமத்தின் மகிமைக்கு ஒரு சான்று நீதான். உனக்கு நான் ராமாவதாரத்தை உபதேசிக்கிறேன்.” என்று சொல்லத் துவங்கினார். ராமரின் ஜனனம் முதல் பட்டாபிஷேகம் வரையிலும், காட்சிகளாக வால்மீகியின் மனத்திரையில் வந்தது. வால்மீகியின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. “ராமன் எவ்வளவு அருமையானவன் இப்படி எல்லா கல்யாண குணங்களும் ஒன்றிணைந்த ஒருவர் இருக்கக் கூடுமா!” என்று வால்மீகி வியந்தார்.
“ராம நாமத்தின் மகிமை இன்னமும் இருக்கிறது. வால்மீகி! நீ கூடிய விரைவில் உணரும் காலம் வரும்.” என்றுகூறி நாரதர் வாழ்த்தி மறைந்தார்.முன்னிலும் அதிகமாக ராம நாமத்தை ஜபித்தபடியே வால்மீகியின் வாழ்நாள் நகர்ந்தது. ராம நாமம் எனும் உலகத்துக்குள்தான் வால்மீகி வாழ்ந்தார். ராம நாமம் அவர் மூச்சாக மாறிப் போனது.
(வால்மீகியின் சிறப்பு தொடரும்…)
கோதண்டராமன்
The post காவிய பாவலர் appeared first on Dinakaran.