சென்னை: சென்னை எழும்பூரில் கடந்த 3ம் தேதி பிராமணர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு தெலுங்கு பெண்களை இழிவாக பேசினார். இந்த வழக்கில் கடந்த 16ம் தேதி இரவு ஐதராபாத்தில் தனிப்படையினர் கஸ்தூரியை கைது செய்தனர். பின்னர் கடந்த ஞாயிற்று கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் புழல் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள நடிகை கஸ்தூரி, தனது வழக்கறிஞர் பிரபாகரன் மூலம் எழும்பூர் 5வது நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.
அதில், நடிகை கஸ்தூரிக்கு சம்மனை நேரில் அளிக்காமல், அவரது சென்னையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டிவிட்டு ஐதராபாத்தில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கஸ்தூரி மன்னிப்பு கேட்ட பிறகும் போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே ஜாமீன் வழங்க மனுவில் கோரியிருந்தார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று எழும்பூர் 14 வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் தயாளன் முன்பு விசாரணைக்கு வந்தது. நடிகை கஸ்தூரியின் குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு குழந்தை என்பதால் மனிதாபமான அடிப்படையில் ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட் மனுதாரார் கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மறு உத்தரவு வரும் வரை நடிகை கஸ்தூரி எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
The post காவல்துறையின் மனிதாபிமானத்தால் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.