காவல்துறை, தீயணைப்புத்துறையை சேர்ந்த 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

4 months ago 12

சென்னை: பொங்கல் பண்டியை முன்னிட்டு, 3,186 காவல் துறை பணியாளர்களுக்கு அவர்களின் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து, தமிழக முதலமைச்சர் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண், பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு ‘தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்’ வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், இயந்திர கம்மியர் ஓட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும்.

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்), இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (பெண்) நிலைகளில் 60 பேருக்கும் ‘தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400, 2025 பிப்ரவரி 1ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 பேர் வீதம், மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ‘தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்கு தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். மேற்கண்ட அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு பதக்க அணிவகுப்பு விழாவில் முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post காவல்துறை, தீயணைப்புத்துறையை சேர்ந்த 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார் appeared first on Dinakaran.

Read Entire Article