சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக காவல்துறையில் டிசம்பர் 11ம் தேதி நிலவரப்படி தாலுகா காவல்நிலையங்களில் 1453 பணியிடங்கள், ஆயுதப்படைகளில் 649 பணியிடங்கள், சிறப்புக் காவல் படையில் 117 பணியிடங்கள் என மொத்தம் 2219 காவல் சார்-ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால் காவல்துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய சார்-ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 2023ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட சார்-ஆய்வாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்.
இவை அனைத்துக்கும் மேலாக, கடந்த ஆண்டு ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படாததால், பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சார் -ஆய்வாளர் பணியில் பங்கேற்பதற்காக வயது வரம்பை கடந்து விட்டனர். அவர்கள் எந்த தவறும் செய்யாத நிலையில், அவர்கள் தண்டிக்கப்படக் கூடாது. அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு சார் -ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 33 வயது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 வயது, பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு 38 வயதாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post காவல் சார்-ஆய்வாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிப்பு வெளியிட அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.