திருவொற்றியூர்: காவலர் என போலி அடையாள அட்டை பயன்படுத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். எண்ணூர் காவல் நிலைய தலைமை காவலர் ரீகன்ஜோஸ், ஜெகதீஸ்வரன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் காரில் அமர்ந்தபடி சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற போலீசார், ‘‘நீங்கள் யார், எந்த பகுதியை சேர்ந்தவர்கள், எதற்காக இங்கு காரில் அமர்ந்து மது அருந்துகிறீர்கள்,’’ என விசாரித்துள்ளனர். அப்போது, அந்த கார் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த வாலிபர், ‘‘எனது தம்பி ரவிக்குமார் போக்குவரத்து போலீசில் காவலராக உள்ளார்,’’ என்று கூறி அடையாள அட்டையை காண்பித்துள்ளார். இதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார், காரில் இருந்த அனைவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், அந்த வாலிபர் காண்பித்த அடையாள அட்டை போலி என்பதும், காரில் இருந்த பதிவு எண்ணும் போலியானது என தெரியவந்தது. விசாரணையில், எர்ணாவூர் நேதாஜி நகரை தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் என்பதும், தினேஷின் தம்பி ரவிக்குமார், காவலர் போல் போலி அடையாள அட்டை தயாரித்து, எங்காவது போலீசில் மாட்டினால் அந்த ஐடி கார்டை காண்பித்து எஸ்கேப் ஆகி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, ரவிக்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 போலி அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பினர்.
The post காவலர் என ேபாலி ஐடி கார்டு வைத்திருந்த வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.