விவசாயத்தில் ஆர்வம் உண்டு. ஆனால், விவசாயத்தில் பெரிய அனுபவமோ விவசாய நிலமோ இல்லாதபோது வீட்டை சுற்றி இருக்கிற இடத்தில் காளான் உற்பத்தி செய்து நல்ல வருமானம் பார்க்கலாம். அதற்கு உதாரணமாக இருப்பவர்தான் சேகரன். செங்கல்பட்டு மாவட்டம், கோட்டைகாடு பகுதியை சேர்ந்த இவர் தனது வீட்டிற்கு அருகே இருக்கிற அவரது இடத்தில் கொட்டகை அமைத்து சிப்பி காளான் உற்பத்தி செய்து வருகிறார். மேலும் அவரே நேரடியாகவும் விற்பனை செய்கிறார். அவரது காளான் வளர்ப்பை பற்றியும் நேரடி விற்பனை பற்றியும் அறிந்துகொள்ள நேரடியாக அவரைச் சந்தித்தோம். காளான்களை அறுவடை செய்துகொண்டிருந்தவர் பேசத் தொடங்கினார். நாங்கள் பூர்வீகமாக விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் அப்பா காலத்தில் இருந்தே விவசாயம்தான் எங்களுக்குத் தொழில். விவசாயம் செய்துதான் அப்பா என்னை படிக்க வைத்தார். அந்த காலத்திலையே நான் பிஎஸ்சி இயற்பியல் படித்துள்ளேன். என்னதான் கல்லூரி படிப்புவரை படித்தாலும் விவசாயத்தின் மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அதனால், வீட்டை சுற்றி இருக்கும் இடத்தில் வாழை, கொய்யா, தென்னை போன்ற மரங்களை பயிரிட்டு வந்தேன். விவசாயத்தில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருக்கும். அதனால் முழுமையாக விவசாயம் பக்கம் திரும்பலாம் என முடிவெடுத்து 1994ல் காளான் வளர்க்க தொடங்கினேன். காளான் வளர்ப்புக்கு தேவையான விதைகளை கோயமுத்தூரில் இருக்கிற என்னுடைய நண்பரிடமிருந்து வாங்கி வந்தேன். அதுதான் காளான் வளர்ப்பில் எனக்கு முதல்படி.
நான் காளான் விவசாயத்தை தொடங்கும்போது அந்த காலத்தில் யாருமே காளான் விவசாயம் செய்யவில்லை. அதனால், காளான் விவசாயம் சார்ந்த தொழில்முறைகளும் எனக்கு சரியாக தெரியவில்லை. மேலும், காளான் சாப்பிடும் மக்கள் குறைவாக இருந்ததால் விளைந்த காளான்களை விற்பனை செய்வதுமே சிரமமாக இருந்தது. என்ன செய்வதென்று யோசித்து ஒரு கட்டத்தில் காளான் வளர்ப்பதை நிறுத்திவிட்டேன். அதன்பின், விவசாயத்தில் இருந்து வெளியேறி கட்டில், பீரோ தாயாரிக்க பயன்படும் மரங்களை வாங்கி விற்பனை செய்யத் தொடங்கினேன். 10 வருடத்திற்கு மேலாக இந்த தொழிலையே செய்து வந்தேன். 2004ம் ஆண்டு காலகட்டத்தில் காளான் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமானது. அதனால், மீண்டும் காளான் வளர்ப்புக்கு திரும்பினேன். இதற்காக காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற காளான் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டேன். இங்கு காளான் வளர்ப்பது எப்படி, அதை எந்த முறையில் பராமரிக்க வேண்டும் என நன்கு கற்றுக்கொண்டேன்.
பிறகு, அங்கிருந்தே காளான் வளர்ப்புக்குத் தேவையான விதைகளை வாங்கி வந்து காளான் வளர்ப்பதற்கு படுக்கை அமைக்க தொடங்கினேன். முதலில் 300 சதுர அடியில் மட்டுமே காளான் சாகுபடியை தொடங்கினேன். இதில் நான் எதிர்பார்ததை விட அதிக லாபம் கிடைத்தது. பின்னர் 1000 சதுர அடியில் காளான் வளர்ப்பை விரிவு படுத்தினேன். இதில் எனக்கு பெரிய மகசூல் கிடைக்கவில்லை. இதையடுத்து பாண்டிச்சேரியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்ற ஆசிரியரிடம் காளான் உற்பத்தியை அதிக படுத்துவதற்கான ஆலோசனையை கேட்டறிந்தேன். ஆயிரம் சதுரடி இடத்தை இரண்டு 500 சதுரடி இடமாக பிரித்து இரண்டு இடத்தில் காளான் வளர்க்க சொன்னார். அப்போதுதான் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். காளான் வளர்க்கப்படும் கொட்டகையில் காற்றின் சீதோஷனத்தால் மகசூல் பாதிக்கப்பட்டாலும் மற்றொன்றில் எடுத்துவிடலாம் என்று கூறினார். அதையே நான் பின்பற்றினேன். நல்ல மகசூல் கிடைத்தது.
இப்போது 2200 சதுரடி அடியில் 2400 படுக்ககையில் கொண்டு சிப்பி காளான் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறேன். 12 க்கு 24 என்கிற இன்ச் அளவில் ஒரு பாலிதீன் பையில்தான் காளான் உற்பத்தி செய்வது சரியாக இருக்கும். கொட்டகையை பொருத்தவரையில் மேலே மட்டும் கூரை அமைத்துள்ளேன். அதற்கு மேல் தார்பாலின் போட்டுள்ளேன். பக்கவாட்டில் நான்கு பக்கமும் காற்று உள்ளே செல்லும் வகையிலும், வெப்பம் உள்ளே செல்லாத வகையில் இருக்கக்கூடிய பச்சை நிற துணியை கட்டிவைத்துள்ளேன்.
ஒரு படுக்கை அமைக்க 175 கிராம் விதைகள் தேவைப்படுகிறது. அதை வளர்க்க வைக்கோலை தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து, பின் உலர வைப்பேன். வைக்கோலை ஊற வைக்கும் தண்ணீரின் பிஎச்(ph) லெவல் 6.5 லிருந்து 7.5 மட்டுமே இருக்க வேண்டும். அந்த வைக்கோலை எடுத்து அதில் விதைகளை போட்டு, அடுக்கடுக்காக வைப்பேன். இதில் மொத்தம் 5 அடுக்கு இருக்கும். முதல் அடுக்கில் 5 செமீக்கும், 5வது அடுக்கில் 5 செமீ விதையும் தூவுவேன். இடையில் இருக்கும் மூன்று அடுக்கையில் 8 செமீ இருக்கும்அளவிற்கு படுக்கை அமைத்து விதைகளை தூவுவேன். பாலிதீன் கவரில் உரியை கட்டி தொங்க விடுவதுபோல் தொங்க விட வேண்டும். தொங்க விடுவதற்கு முன்பு காளான் வளர்ந்து வெளியே வருவதற்கு ஏதுவாக ஒரு பையில் கோனூசி கொண்டு 12 துளையிடுவேன். அதன் சுற்றுப்புற வெப்பநிலை 20 டிகிரி செல்சியசில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதே வெப்பநிலையில் 14 நாட்கள் பராமரித்தால் காளான் நன்கு வளர்ந்திருக்கும். அதை எடுத்து பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பி விடலாம். கொட்டகையை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டும் என்பதால் தற்போது பச்சைநிற வலை கொண்டு காளான் வளர்ப்பு கூடத்தை அமைத்து வைத்திருக்கிறேன். அதில் வெளிப்புறத்தில் உள்ள வெப்பக் காற்று உள்ளே செல்லாமல் இருக்க உட்புற சுவரின் நான்கு புறங்களிலும் சாக்குகளை தொங்க விட்டிருக்கிறேன். மேலும் அந்த அறையின் வெப்பநிலையை குறைக்க தண்ணீரை அவ்வப்போது தெளிப்பேன். அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப தண்ணீரை அவ்வப்போது தெளித்தால் காளான் நன்கு வளரும். எவ்வளவு கவனமுடன் இருந்தாலும் ஆரம்பத்தில் இழப்புகள் இருக்கத்தான் செய்யும். நான் வளர்க்கும் காளான்களை கோட்டைக்காடு, திருவான்மியூர், செய்யூர் சுற்று வட்டார பகுதிகளில் நேரடி முறையில் விற்பனை செய்கிறேன். உற்பத்திக்கு ஏற்ப விற்பனையை அதிகரித்து வருகிறேன். விற்பனை குறைந்தால் அதற்கு ஏற்றாற்போல் உற்பத்தியையும் குறைத்து நஷ்டத்தை தவிர்த்து வருகிறேன். அப்படிச் செய்தால் மட்டுமே சிப்பி காளான் வளர்ப்பில் நிலைத்து இருக்க முடியும் என நம்பிகை பொங்க பேசுகிறார்
சேகரன்.
தொடர்புக்கு
சேகரன்: 99403 38374.
காளான் உற்பத்தி செய்து நேரடியாக விற்பனை செய்வதுபோக காளான் விதைகளையும் விற்பனை செய்து வருகிறார் சேகரன். 300 கிராம் காளான் விதைகளை ரூ.37 க்கு விற்பனை செய்து வருகிறார். இந்த முறையில் சராசரியாக மாதம் 450 கிலோ காளான் விதைகள் விற்பனை செய்வதாக கூறுபவர், இதன்மூலமும் கூடுதல் வருமானம் பார்க்கிறேன் என மகிழ்கிறார்.
2200 சதுரடியில் 2400 சிப்பி காளான் படுக்கைகளில் இருந்து மாதம் 700 கிலோ காளான் உற்பத்தி ஆகிறது. ஒரு கிலோ காளானை ரூ.200 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். அப்படி பார்க்கும் போது எனக்கு மாதத்திற்கு ரூ1.40 லட்சம் கிடைக்கிறது. அதே சமயம் ஒரு கிலோ காளானை உற்பத்தி செய்ய ரூ.65 செலவாகிறது. இந்த 700 கிலோ காளானின் உற்பத்திச் செலவு போக ரூ.94500 லாபமாக கிடைக்கிறது.
The post காளான் வளர்ப்பு…லாபமோ சிறப்பு… appeared first on Dinakaran.