யமுனா நகர்: கால்வாய் ஆக்கிரமிப்பால் அரியானாவில் இருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய சர்க்கரை ஆலையில் வெள்ளம் புகுந்தது. இதனால் ரூ. 60 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அரியானா மாநிலம், யமுனாநகரில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான சரஸ்வதி சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையின் சேமிப்புக் கிடங்கிற்குப் பின்னால் மாநகராட்சிக்குச் சொந்தமான வடிகால் கால்வாய் ஒன்று செல்கிறது. ஆனால், இந்தக் கால்வாய் ஆக்கிரமிப்புகள் காரணமாக நீண்ட நாட்களாக அடைபட்டிருந்த நிலையில், அதிகாரிகள் அதைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், ஆலையின் சேமிப்புக் கிடங்கில் சுமார் 97 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,20,000 குவிண்டால் சர்க்கரை இருப்பு வைக்கப்பட்டிருந்தது. ேநற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக, அடைபட்டிருந்த கால்வாயில் இருந்து வெளியேறிய உபரிநீர், மழைநீருடன் சேர்ந்து சர்க்கரை ஆலையின் கிடங்கிற்குள் புகுந்தது. இதனால், அங்கு வைக்கப்பட்டிருந்த சர்க்கரை மூட்டைகள் நீரில் மூழ்கி நாசமாகின. இதுகுறித்து ஆலையின் பொது மேலாளர் ராஜீவ் மிஸ்ரா கூறுகையில், ‘எளிதில் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்ட சர்க்கரை மூட்டை நீரில் கரைந்துவிட்டது. சுமார் 40% சர்க்கரை, அதாவது 50 முதல் 60 கோடி ரூபாய் மதிப்பிலான சர்க்கரை பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. ஆலையின் வரலாற்றில் இதுபோன்று சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை. தற்போது கிரேன்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்றார்.
The post கால்வாய் ஆக்கிரமிப்பால் விபரீதம்; ஆசியாவின் மிகப்பெரிய சர்க்கரை ஆலையில் புகுந்த வெள்ளம்: அரியானாவில் ரூ. 60 கோடி நாசம் appeared first on Dinakaran.