*ஆந்திராவில் பரபரப்பு
திருமலை : ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், வான்கொல்லாவைச் சேர்ந்தவர் கட்டுமானத் தொழிலாளி சந்திரசேகர்(46). இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரமாதேவி என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சந்திரசேகர் மதுவுக்கு அடிமையானதால் அவரது குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில், பாலம்கொண்டாவைச் சேர்ந்த ஒருவருடன், ரமாதேவிக்கு திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்தது வந்துள்ளது. இதனால் அவ்வபோது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், சமீபத்தில் தல்லிக்கு வந்தனம் திட்டத்தில் மாநில அரசு சந்திரசேகரின் 2 பிள்ளைகளுக்கு உண்டான கல்வி உதவித்தொகையாக ரூ.26 ஆயிரம் பணத்தை ரமாதேவியின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தது. இதையறிந்த சந்திரசேகர் அந்தப் பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுத்து மது குடித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த ரமாதேவி சந்திரசேகர் மீது கடும் கோபத்தில் இருந்தார். அதன்படி, கடந்த 2ம் தேதி இரவு 11 மணியளவில், சந்திரசேகர் ரமாதேவியிடம் மது கேட்டுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திய ரமாதேவி, மதுவில் விஷத்தைக் கலந்து கணவருக்கு கொடுத்தார்.
மதுபோதை தலைக்கேறிய பிறகு கணவரின் கழுத்தை நெரித்து, கட்டையால் அடித்தார். இதில் சந்திரசேகர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இந்நிலையில், விஷத்தின் தாக்கத்தால், அதிகாலையில் அவர் ரத்த வாந்தி எடுத்தபடி இறந்து கிடந்தார். இதற்கிடையில், ரமாதேவி காலையில் எழுந்த ரத்தக் கறைகளை சுத்தம் செய்து வழக்கம்போல் வேலைக்குச் சென்றார்.
மதியம் வீட்டிற்கு வந்த ரமாதேவி, தனது கணவர் மது அருந்தி இறந்துவிட்டதாக அண்டை வீட்டாரிடம் கூறி நம்ப வைத்துள்ளார். இருப்பினும், சந்திரசேகரின் உடலில் இருந்த காயங்கள் காரணமாக சந்தேகமடைந்த அவரது சகோதரர் மகேஷ், போலீசில் புகார் அளித்தார். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்திரசேகர் கழுத்தை நெரித்து விஷம் குடித்து இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் ரமாதேவியை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் போலீசார் ரமாதேவியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்கண்ட தகவலை டிஎஸ்பி மகேந்திரா தெரிவித்தார்.
The post பிள்ளைகளின் உதவித்தொகையை செலவு செய்ததால் மதுவில் விஷம் கலந்து கணவரை அடித்து கொன்ற மனைவி கைது appeared first on Dinakaran.