பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு

5 hours ago 1

*வியாபாரிகள் வேதனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவாக இருந்தாலும், மழையால் விற்பனை மந்தமானது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் உள்ள மாட்டு சந்தைக்கு, வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும். வெளி மாநிலங்களிலிருந்தும் விற்பனைக்காக மாடுகள் கொண்டு வரப்படுகிறது.

இந்த மாதத்தில் கடந்த இரண்டு வாரமாக சந்தைக்கு மாடுகள் வரத்து ஓரளவு இருந்துள்ளது. ஆனால், இந்த வாரத்தில், நேற்று நடந்த சந்தையின்போது வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் வரத்து குறைவாகவே இருந்தது.

சுமார் 800-க்கும் குறைவான மாடுகள் வரபெற்றாலும், கேரள மாநில பகுதியில் பரவலான மழையால், அம்மாநில பகுதியில் இருந்து வியாபாரிகள் வருகை குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால், நேற்று கேரள மாநில பகுதி மட்டுமின்றி தமிழ்நாடு பகுதியில் இருந்தும் வியாபாரிகள் வருகை குறைவால், விற்பனை மந்தமானது. மேலும், கடந்த வாரத்தை விட, மாடுகள் விலை சற்று குறைவானது.

இதில் காளை மாடு முதல் ரூ.45 ஆயிரத்துக்கும், எருமை மாடு ரூ.40 ஆயிரத்துக்கும், பசு மாடு ரூ.38 ஆயிரத்துக்கும், ஆந்திரா காளை மாடுகள் ரூ.50 ஆயிரம் வரையிலும். கன்றுக்குட்டிகள் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் என கடந்த வாரத்தை விட, ஒவ்வொரு மாடுகளும் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலும் குறைவான விலைக்கு விற்பனையானது என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

சேற்றில் சிக்கிய சரக்கு ஆட்டோ

மாட்டுச்சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வாரம் தோறும், வாகனங்களில் மாடுகள் கொண்டு வரப்பட்டாலும், அங்கு போதிய சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைவால், வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்.

மழை பெய்ததால் அப்பகுதி சேறும் சகதியுமானது. நேற்று களி மண் கலந்த சேற்றில், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி தவித்தது. இந்த நிலை நீடித்தால், பிரதான சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை எற்படும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்னர்.

The post பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு appeared first on Dinakaran.

Read Entire Article