நன்றி குங்குமம் டாக்டர்
காபி இல்லாமல் நாள் இல்லை என்பது பலரது எண்ணம். காலை தொடங்கும் போதே நாளை கடக்க காபி இன்றியமையாததாக நினைப்பவர்களும் உண்டு. ஆனால் காலையில் காபி குடிப்பது நாள் முழுவதும் ஆற்றலை அதிகரிக்க செய்யும். சரியான நேரத்திலும் சரியான வடிவத்திலும் மிதமான அளவு எடுத்துக்கொள்ளும் போது காபி இதயத்துக்கு ஆரோக்கியமான நன்மைகளை அளிக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வுகள்.
காபி ஒரு ஆற்றல் மேம்படுத்தும் பானமாக குறிப்பாக இதயத்துக்கு ஆரோக்கியமான நன்மைகளை கொண்டுள்ளது என்பதற்கு சான்றுகள் உள்ளன. காபியின் சாத்தியமான இதய ஆரோக்கியமான விளைவுகள் பெறுவதற்கு எப்படி எடுத்துகொள்ள வேண்டும். என்பது குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் முதன்மை இதயநோய் நிபுணர் அருண் கல்யாணசுந்தரம்.
காபி இதயத்துக்கு எவ்வாறு பயனளிக்கும்?
காபி அதன் கஃபைன் உள்ளடக்கத்துக்காக பலரும் அதை நன்மை அல்ல என்று சொன்னாலும் விஞ்ஞானிகள் இது உண்மையில் யாரும் நினைத்தைவிட இதயத்துக்கு உகந்ததாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். உதாரணமாக மிதமான அளவு காபி உட்கொள்வது இதய நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தை குறைக்கிறது என்று க்ளீவ்லேண்ட் க்ளினிக்கின் ஆய்வு கூறுகிறது. எனினும் காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பெறுவதற்கு மிதமான தன்மையே முக்கியமாக தெரிகிறது.
ஏனெனில் அதிகமாக காபி குடிப்பது அதிகரித்த ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் தூக்க கலக்கம் உள்ளிட்ட பக்கவிளைவுகளை உண்டு செய்யும். அதனால் இதய ஆரோக்கியத்துக்காக காபியை குடிக்க விரும்பினால் மிதமான அளவு மட்டும் சேர்க்க வேண்டும். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூற்றுப்படி, பாலிபினால்கள் உள்ளிட்ட காபியின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வீக்கத்தை குறைக்கவும் ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும். இது இதய ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் என்கிறது.
இதயத்துக்கு எந்த வகையான காபி நல்லது?
இதய ஆரோக்கியம் பற்றிப் பேசும் போது எல்லா காபியும் ஒன்று என்று நினைத்துவிடகூடாது. ஏன்னா எல்லா காபியும் சமமான அளவு பண்புகளைக் கொண்டிருப்பதில்லை. காபி பொதுவானது. ஆனால் எல்லாம் ஒரே வடிவம் அல்ல. அதனால் இதய ஆரோக்கியத்துக்கு காபி நல்லது என்றாலும் நீங்கள் என்ன வகை காபி விரும்புகிறீர்கள் என்பதையும் கவனிப்பது முக்கியம்.
ப்ளாக் காபி
இது சர்க்கரை, பால் அல்லது க்ரிம் சேர்க்காத காபி. இது இதயத்துக்கு நன்மை பயக்கும் ஒன்றாக சொல்லப்படுகிறது. இதில் அதிக ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இந்த ப்ளாக் காபியில் எடை அதிகரிக்கும் மற்றும் கொழுப்பு தூண்டும் கொழுப்புகள் சர்க்கரைகள் எதுவும் இல்லை.
எஸ்பிரசோ காபி
எஸ்பிரசோ காபி நல்லது. இது மற்ற காஃபின் கலந்த பானங்களை விட அதிக சுவையையும் குறைவான கலோரியையும் கொண்டுள்ளன. இது வலுவான சுவை கொண்டது. இதன் பாலிபினால் உள்ளடக்கம் காரணமாக இதய ஆரோக்கியத்துக்கு மிதமாக உதவியாக இருக்கும்.
கோல்ட் ப்ரூ காபி
மற்றொரு பிரபலமான காபி என்றால் அது கோல்ட் ப்ரூ காபி. இது சூடான காபியை விட மென்மையாக அமிலத்தன்மை குறைந்ததாக இருக்கும். இந்த காபி வயிற்று வலி அல்லது செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு இதயத்துக்கு ஆரோக்கியமான நன்மைகளை அளிக்கிறது. மேலும் இவை எளிதான தேர்வும் கூட. ஆனால் க்ரீம்கள் மற்றும் இனிப்புகள் காபியின் சுவையை அதிகரிக்க செய்கிறது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஏனெனில் இவை ஆரோக்கியமற்ற கொழுப்புகளை கொண்டிருக்கின்றன. இதனால் காபியின் நன்மைகள் குறையச் செய்கிறது. அதனால் இதய ஆரோக்கியத்துக்கு காபி என்னும் போது நீங்கள் இவற்றில் கருப்பு காபியாக குடிக்கலாம். அல்லது மிகச் சிறிய அளவில் பால் சேர்த்து குடிக்கலாம்.
இதயம் ஆரோக்கியமாக இருக்க ஓரு நாளைக்கு எத்தனை முறை காபி குடிக்க வேண்டும்?
பல ஆய்வுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் படி தினமும் 3 கப் வரை மிதமான காபி குடிப்பது பக்கவாதம் மற்றும் கரோனரி தமனி நோய் அபாயத்தை குறைக்க உதவும். மிதமான அளவில் நாள் ஒன்றுக்கு தோராயமாக 200-400 மி.கி காஃபின் எடுத்துக்கொள்ளலாம். இது இதயத்தில் சாதகமான விளைவுகளுடன் தொடர்புடையது. மறுபுறம் அதிகப்படியான நுகர்வு குறிப்பாக உணர்திறன் மிக்க நபர்களில் அதிகரித்த இரத்த அழுத்தம் மற்றும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு (அரித்மியா) மற்றும் தூக்க கலக்கம் உள்ளிட்ட பக்கவிளைவுகளை உண்டு செய்யலாம்.
நீங்கள் காபி பிரியர்களாக இருந்தால் தினசரி அளவில் எவ்வளவு காஃபின் குடிக்கிறீர்கள் என்பதை கண்காணிப்பதும் முக்கியம். காபி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து மருத்துவரின் கருத்துப்படி மிதமான காபி நுகர்வு பெரும்பாலான மக்களுக்கு இதய ஆரோக்கியமான வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கலாம்.
காபியில் ஆக்ஸிஜனேற்ற விளைவுகள் உள்ளன. இது அழற்சியை குறைத்து ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தலாம். ஆனால் மிதமான நுகர்வு இருக்க வேண்டும். குறிப்பாக காலையில் எடுத்துக்கொள்வது இதயத்துக்கு நன்மை செய்யும். அதே நேரம் சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, நீரேற்றமாக இருப்பது மற்றும் இதய ஆரோக்கிய நன்மைகளை பெற மிதமான அளவு எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். அதனால் காபியை எடுத்துக்கொள்ளும் போது மற்ற சுகாதார நிலைமைகளை கவனத்தில் கொள்வது அவசியம். அதே நேரம் உயர் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஒழுங்கற்று இருக்கும் அரித்மியா, தூக்க கோளாறுகள் கொண்டிருப்பவர்கள் அதிக அளவில் காபி எடுத்துக்கொள்ளக்கூடாது.
காலை காபியுடன் தொடங்குவது நாளை ஆற்றலுடன் வைத்திருக்க செய்யும். மிதமாக எடுத்துகொண்டால் அது இதயத்தின் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யும். காபியில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைவாக உள்ளன. இது இதயநோய், பக்கவாதம் மற்றும் பிற இதய பிரச்சனைகளிலிருந்து உடலை பாதுகாக்க உதவும். ஆனால் மிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாள் ஒன்றுக்கு 1-3 கப் மேல் எடுக்க கூடாது. உயர் ரத்த அழுத்த எதிர்மறை விளைவுகளை தவிர்த்து நன்மைகளை அதிகரிக்கும். எப்படி இருந்தாலும் நல்ல ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடு உள்ளிட்ட சீரான வாழ்க்கை முறை இதய ஆரோக்கியத்துக்கு பங்குவகிக்கிறது. அதனால் காலை காபியை அனுபவித்து குடியுங்கள். ஆனால் சமநிலையில் மிதமாக வைத்திருங்கள்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
The post காலையில் காபி குடிப்பது இதயத்துக்கு நல்லதா? appeared first on Dinakaran.