காலை 10 மணி வரை கடும் பனி மூட்டம் சென்னையில் தரையிறங்காமல் 10 விமானங்கள் திரும்பி சென்றன: 48 விமான சேவைகள் பாதிப்பு

3 hours ago 2

சென்னை: கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 10 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.  சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை 7.30 மணி வரையில் வானிலை தெளிவாக இருந்தது. அதன்பின்பு திடீரென மூடுபனி தொடங்கியதோடு, மோசமான வானிலை நிலவியது. இதனால் சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் காலை 7.30 மணிக்கு மேல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.

லண்டன், கோலாலம்பூர், தோகா, சிங்கப்பூர், இலங்கை, அந்தமான், மும்பை உள்ளிட்ட 10 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூரு, ஐதராபாத், திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. அதேபோல் சென்னையில் தரையிறங்க வந்து, விமான நிலைய ஓடுபாதை தெரியாமல் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் நீண்ட நேரமாக கோவை, மும்பை, திருவனந்தபுரம், திருச்சி, தூத்துக்குடி, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட 12 விமானங்கள் வானில் வட்டமடித்து தத்தளித்துக்கொண்டு இருந்தன.

மேலும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சர்வதேச மற்றும் உள்நாட்டு 26 விமானங்கள் பலமணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை விமான நிலையத்தில் திடீர் மூடுபனி மூட்டத்தால் 48 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பயணிகள் பலமணி நேரம் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக பனிமூட்டம் அதிகாலையில் தொடங்கி காலை 8 மணி வரையில் இருக்கும்.

ஆனால் இன்று (நேற்று) வழக்கத்துக்கு மாறாக திடீரென காலை 7.30 மணிக்கு மேல் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டு, ஓடுபாதை தெரியாத நிலை ஏற்பட்டது. இந்நிலை சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் விமான சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகின. இயற்கையால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் பயணிகள் மற்றும் விமானங்களின் பாதுகாப்புக்காக, விமான சேவைகளில் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அதோடு பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கும் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக வருந்துகிறோம்’’ என்றனர்.

The post காலை 10 மணி வரை கடும் பனி மூட்டம் சென்னையில் தரையிறங்காமல் 10 விமானங்கள் திரும்பி சென்றன: 48 விமான சேவைகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article