புதுடெல்லி: டெல்லியில் மொத்தமுள்ள 70 பேரவை தொகுதிகளுக்கு பிப்ரவரி 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் புதுடெல்லி பேரவை தொகுதியில் டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். இங்கு காங்கிரஸ் வேட்பாளராக சந்தீப் தீட்சித்தும், பாஜ வேட்பாளராக பர்வேஷ் வர்மாவும் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி தினம். இதையடுத்து நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்ற கெஜ்ரிவால், கன்னாட் பிளேசில் உள்ள அனுமன் மற்றும் வால்மீகி கோயில்களில் தரிசனம் செய்து வழிபட்டார்.
தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் இருந்து ஆம் ஆத்மி தொண்டர்கள் புடைசூழ அரவிந்த் கெஜ்ரிவால் நடந்து சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. கடவுள் என்னுடன் இருக்கிறார். கடவுளால் பாதுகாக்கப்பட்டவர்களை யாராலும் கொல்ல முடியாது” என்று இவ்வாறு கூறினார். இதனிடையே டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி வழங்கினார். இதையடுத்து கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
The post காலிஸ்தான் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் கடவுள் என்னை காப்பாற்றுவார்: வேட்பு மனு தாக்கலுக்கு பின் கெஜ்ரிவால் பேட்டி appeared first on Dinakaran.