திருவள்ளூர்: காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஆண்டுதோறும் கோடை விடுமுறை மே மாதங்களில் 15 முதல் 30 நாட்கள் அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் இன்று 2வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர்கள் கடந்தாண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியபோது கோடை விடுமுறை 15 நாட்கள் அதாவது மே மாதத்தில் விடப்பட்டது. இந்தாண்டும் மே மாதத்தில் அரசு விடுமுறை அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன்படி, கடந்த மாதம் விடுமுறை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டது.
ஆனால் மே மாதத்துக்கான விடுமுறை இதுவரை அளிக்கப்படவில்லை. இதையடுத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தை சார்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் 500க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கடும் வெயிலில் குடைகள் மற்றும் தாங்கள் கொண்டுவந்திருந்த பேனரை தலைமீது வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
The post காலி பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம் appeared first on Dinakaran.