புதுடெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் இரண்டு ரிட் மனுக்களும், அதேப்போன்று துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் ஒரு ரிட் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது. அதே போன்று, உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பில் இன்று எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில், “அரசியல் சாசனத்தின் கீழ் ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது. தேவைப்பட்டால் ஆளுநருக்கு எதிரான வழக்குகளை நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்கலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்ற பஞ்சாப் வழக்கின் தீர்ப்பு தனக்கு பொருந்தாது. ஆளுநர் ஒவ்வொரு முறையும் மாநில அமைச்சரவை ஆலோசனைப்படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படி மசோதா மீதான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டால் அது செயலிழந்ததாக அர்த்தம். காலாவதியான மசோதாவை பேரவையில் நிறைவேற்றி மீண்டும் அனுப்பினால் ஒப்புதல் தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள 4 அதிகாரங்கள் விரிவாக வரையறுக்கப்பட்டுள்ளன,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post காலாவதியான மசோதாவை பேரவையில் நிறைவேற்றி மீண்டும் அனுப்பினால் ஒப்புதல் தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை : ஆளுநர் தரப்பு appeared first on Dinakaran.