சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றியதால் விஜயலட்சுமி சுமார் 7 முறை கருக்கலைப்பு செய்துள்ளார். எனவே, சீமானுக்கு எதிரான புகார் தீவிரமானது என்பதால் அதை ரத்து செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளி்த்துள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது வளசரவாக்கம் போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்திருந்த மனு, உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக கடந்த பிப்.17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் 12வாரத்துக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார்.