விஜயபுரி என்ற நாட்டை விவேகவர்மன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் அரசவையில் நன்கு கற்றிருந்த அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர். அரசன் ஒரு நாள் அந்த அறிஞர்களை பார்த்து, ‘‘அறிஞர் பெருமக்களே வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் எது?’’ கேட்டான். இந்த கேள்வியை கேட்டதும், முதல் அறிஞர், ‘‘வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் உயிர்தான். உயிரில்லை என்றால் நம் வாழ்க்கையில் ஒன்றும் அனுபவிக்க முடியாது’’ என்றான். இரண்டாவது அறிஞர், ‘‘மன்னா, வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது அறிவுதான். அறிவில்லாமல் ஒருவரும் வாழ முடியாது’’ என்று பதிலளித்தார். மூன்றாவது அறிஞர் எழுந்து, ‘‘அரசே, வாழ்க்கையில் பொறுமை இன்றி நாம் ஒருகணம்கூட வாழ முடியாது. எனவே மிகவும் விலை உயர்ந்தது பொறுமைதான்’’ என்று பதில் அளித்தார்.நான்காவது அறிஞர், ‘‘அரசே, நம்ம பூமிக்கு வேண்டிய ஆற்றல் சூரியனிடமிருந்துதான் கிடைக்கிறது. சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிர்கள் கிடையாது. எனவே சூரியன்தான் உயர்ந்தது’’ என்றான். ஐந்தாவது அறிஞர், ‘‘வாழ்க்கையில் அனைத்தும் இருந்து அன்பு இல்லாவிட்டால் மனிதன் வாழ்ந்து ஒரு பயனும் இல்லை. எனவே அன்பு தான் மிக மதிப்பு வாய்ந்தது’’ என்றார்.இறுதியாக ஓர் அறிஞர் எழுந்து, ‘‘அரசே, காலம்தான் அனைத்தையும்விட மிகமிக மதிப்பு வாய்ந்த பொருள்.
நமக்கு காலம் இல்லையானால் உயிர் இருந்து என்ன பயன்? அறிவை பயன்படுத்த நமக்கு நேரம் எது? பொறுமையாக இருக்க ஏது அவகாசம். சூரியனை பயன்படுத்த ஏது காலம்? அன்பு காட்ட ஏது வாய்ப்பு? எனவே உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் காலம்தான்.’’அரசர் அந்த ஆறாவது அறிஞர் கூறிய கருத்துதான் சிறந்தது என்று பாராட்டி அந்த கருத்தை ஏற்றுக் கொண்டார். காலத்தின் அருமையை குறித்து மிகவும் அழகாக விளக்கிய ஆறாவது அறிஞருக்கு அவர் மனம் விரும்பும் வகையில் எண்ணற்ற பரிசுகளை கொடுத்து பாராட்டினார்.இறைமக்களே! காலம் பொன் போன்றது என்பார்கள். என்னை பொருத்தமட்டில் அது தவறு. காரணம் இழந்த பொன்னைக் கூட பணம் கொடுத்து வாங்கிவிடலாம். ஆனால் இழந்த காலத்தை எத்தனை கோடி கொடுத்தாலும் பெற முடியாதல்லவா? மாணவச் செல்வங்களே, கோடை விடுமுறை நாட்களை வீணாக்கிவிடாதிருங்கள். மதிப்புமிக்க பெரியோரே, உங்களுக்கு கடவுள் வழங்கியுள்ள ஆயுசு காலங்கள் விலையுயர்ந்தது. அதை தேவையற்ற பேச்சுக்களாலும், செயல்களாலும் வீணாக்கிவிடாதிருங்கள்.‘‘நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்’’ (எபேசியர் 5:16) என இறைவேதம் கூறுகிறது. காலத்தின் முக்கியத்துவம் அறிந்து வாழ கடவுள் அருள் புரிவாராக.
– அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்.
The post காலத்தின் அருமையை அறிவோம்! appeared first on Dinakaran.