சின்ன மம்மி, குக்கர்காரர், தேனிக்காரரை செல்லா காசாக்கும் மலராத கட்சியின் புதிய திட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

13 hours ago 2

‘‘இலவச பட்டா வழங்க சர்வே அளவீடுக்கு பயனாளிகளிடம் கறாராக வசூல் நடப்பது கீழ்மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் இலவச பட்டாவுக்கு சர்வே டிபார்ட்மெண்டில் கரன்சியை தண்ணீரா கறக்கிறார்களாம்.. தமிழகம் முழுவதும் ஆட்சேபனை இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு உத்தரவிட்டிருப்பதால் மக்கள் எல்லாம் ரொம்ப மகிழ்ச்சியில் இருக்காங்களாம்.. ஆனால் சில கறைபடிந்த அதிகாரிகளால் அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டிருக்காம்..

குறிப்பா புரம் என்று முடியும் மாவட்டத்தில் பட்டா வழங்கும் பணி ஜரூர் வேகத்தில் நடந்தபோதும் சர்வே டிபார்ட்மெண்டில் இலவச வீட்டுமனை தான் என்று கூறி அளவீடு செய்ய பயனாளிகளிடம் ஆயிரக்கணக்கில் வசூலும் நடக்கிறதாம்.. சர்வே டிபார்ட்மென்டுக்கு புதுசா வந்த பழம்பெரும் நடிகர் பெயரை கொண்டவர்தான் தலைமை தாங்கி வழி நடத்துகிறாராம்.. இதுபற்றிதான் கீழ்மட்ட ஊழியர்களிடம் சலசலப்பு ஏற்பட்டு இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆன்மிக கருத்தரங்கில் கடவுள் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து எதுவும் பாடாதது ஆன்மிகவாதிகள் மத்தியில் முகம் சுழிக்க செய்திருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘பூட்டு நகரத்தில் சமீபத்தில் இந்து அமைப்பினரின் ஆன்மிக கருத்தரங்கு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக வட மாநிலத்துல கவர்னராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சிபிஆர் கலந்துகொண்டாராம்.. கடவுள் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து எதுவும் பாடாமல் கூட்டம் தொடங்கிச்சாம்.. கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக மலராத கட்சியின் மாநில தலைவரும் வந்திருந்தாராம்.. தனக்கு மேடையில் இருக்கை தருவார்கள் என எதிர்பார்த்திருந்தாராம்.. ஆனால், இவரை அதிகமாக யாரும் கண்டுகொள்ளவே இல்லையாம்.. இதனால் மேடையின் கீழே காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாராம்..

கூட்டத்தின் நிறைவில் தேசிய கீதம் பாடல் பாடப்படும் என்றதுமே, வட மாநில கவர்னரும், மலராத கட்சியின் மாநில தலைவரும் ஒன்றாக எழுந்து சென்று காரில் கிளம்பி இருக்காங்க.. தமிழ் தேசியம், நாட்டுப்பற்று என தேசாபிமானிகளாக படம் காட்டும் இவர்கள், தேசிய கீதத்திற்கே அவமரியாதை தரும் விதத்தில் அவசரமாக காரில் கிளம்பி சென்றது கூட்டத்திற்கு வந்த ஆன்மிகவாதிகளை முகம் சுழிக்கச் செய்திருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பூவும், இலையும் இணைந்த பிறகும் கூட மஞ்சள் மாவட்ட இலைக்கட்சியில் மோதல் போக்கு தொடருகிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மஞ்சள் மாவட்டத்தின் இலைக்கட்சி மாஜி மந்திரி ரெட்போர்ட்டுக்கும், சேலம் விஐபிக்கும் உள்ள மோதல் இன்னும் முடிவுக்கு வரலையாம்.. பூவோடு இலை இணைய விருப்பம் காட்டாமல் இருந்து வந்ததால் சேலம் விஐபிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக பூ கட்சி டெல்லி விஐபிக்கள் கொடுத்த ஐடியா படி ரெட்போர்ட் சேலம் விஐபியோடு கடந்த சில நாட்களாக மோதி வந்தார்.. இலையும், பூவும் இணைந்த பிறகு மோதல் போக்கு மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனா நிலைமை அப்படியே தான் இருக்காம்.. சேலம் விஐபி ஆட்சி சிறப்பாக நடத்தினார்ன்னு புகழ்ந்து பேசி ரெட்போர்ட் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்த பிறகும் கூட சேலம் விஐபியின் அதிருப்தி அப்படியேதான் இருக்காம்..

மோதல் போக்கு தொடர்வதால் உள்ளூரில் இருக்கிற இலைக்கட்சி ஆட்களும் ரெட்போர்ட்டுடன் நெருக்கம் காட்டுவதை தவிர்த்து வருகிறார்களாம்.. ஏற்கனவே சோப்பு நுரை புகழுக்கும், ரெட்போர்ட்டிற்கும் மறைமுக மோதல் இருந்து வந்த நிலையில சேலம் விஐபி மோதல் விவகாரத்திற்கு பிறகு சோப்பு நுரை புகழ் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் ரெட்போர்டிடம் பேசுவதையே தவிர்த்து வருகிறார்களாம்.. பூ கட்சி பேச்சையும், ஆலோசனையும் கேட்டு செயல்பட்டா கடைசியில் இதுதான் நிலைமைன்னு தொண்டர்கள் முணுமுணுக்கிறார்கள்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியில் ஓரங்கட்டப்பட்ட சின்ன மம்மி, குக்கர்காரர், தேனிக்காரரை செல்லாக் காசாக்குவதுதான் மலராத கட்சியின் புதிய தலைவரின் திட்டமாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அல்வா ஊரைச் சேர்ந்த தேசிய கட்சியின் புதிய மாநில தலைவருக்கு நிறைய சவால்கள் இருக்காம்.. மலையான மாஜி தலைவர், இவரது தலைவர் பதவிக்கு வேட்டு வைக்க எவ்வளவோ முயற்சி செய்தாராம்.. ஆனால் எப்படியோ அல்வா ஊரின் எம்எல்ஏ மாநில தலைவராகி விட்டார்.. மாநில தலைவர் பதவியை பிடித்த உடனேயே ஊர், ஊராக சுற்றுப்பயணம் செய்து ஆதரவு வட்டத்தை உருவாக்க முயன்று வருகிறாராம்..

கடந்த மக்களவை தேர்தலில் இலை கட்சி கூட்டணி இல்லாமல் தேசிய கட்சி தனித்து நின்றதால் முட்டைதான் மிஞ்சியது.. இதுவும் மலையான தலைவரின் வீழ்ச்சிக்கு காரணம். ஆனால், வருகிற சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு உடைந்த இலை கட்சி கூட்டணி மீண்டும் ஒட்டிக் கொண்டதால், அல்வா ஊரின் எம்எல்ஏவான புதிய தலைவர் உற்சாகத்தில் இருக்கிறாராம்.. இலை கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட சின்ன மம்மி, குக்கர்காரர், தேனிக்காரர் ஆகியோரை ஓரம் கட்டி செல்லாக் காசாக்குவதுதான் அவரது திட்டமாம்..

அதற்காக அவர்களின் தென் மாவட்ட ஆதரவாளர்களை தனது பழைய பழக்கத்தை வைத்து, அல்வா ஊரின் எம்எல்ஏ தொடர்பு கொண்டு பேசி வருகிறாராம்.. அதிருப்தியாளர்களை தேசிய கட்சியில் கொண்டு வந்து சேர்ப்பதன் மூலம் தனது இமேஜ் உயரும்.. இதன் மூலம் இலை கட்சியில் சட்டமன்ற தேர்தலின் போது சீட் எண்ணிக்கையை உயர்த்தலாம் என்பது புதிய தலைவரின் கணக்காம்.. சட்டமன்ற தேர்தல் வரும் சமயத்தில் கட்சியில் தனது பலத்தை காட்ட புதிய தலைவர் முயற்சிக்கிறாராம்.. இதன் மூலம் டெல்லியின் நம்பிக்கையையும் பெற்று விடலாம் என நினைக்கிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post சின்ன மம்மி, குக்கர்காரர், தேனிக்காரரை செல்லா காசாக்கும் மலராத கட்சியின் புதிய திட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article