காற்றில் பறந்து வரும் காலி அனுமன்

2 days ago 3


“வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்கள்’’ பகுதியில் தற்போது நாம் காணவிருக்கும் அனுமன், ஸ்ரீ காலி (Gaali) ஆஞ்சநேயர். இந்த அனுமன், பெங்களூருக்கும் – மைசூருக்கும் இடைப்பட்ட சாலையில் அமைந்திருக்கிறார். இந்த கோயில், கர்நாடக மாநிலத்தின் மிகவும் பழமையான ஆஞ்சநேயர் கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நகரின் மையப்பகுதியான, மைசூர் சாலையில் காலி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளதால், ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலை தரிசித்து செல்கிறார்கள். கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் தங்க முலாம் பூசப்பட்ட கோபுரங்கள் புதிதாக வரையப்பட்டுள்ளன, அவை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன.

காலி என்றால் என்ன?

சுமார், 1425 ஆம் ஆண்டு, விருஷபாவதி மற்றும் அதன் துணை நதியான பஸ்சிமாவாஹினி ஆகிய இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில், மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், காலி ஆஞ்சநேயரை கண்டெடுக்கிறார். (தற்போது, விருஷபாவதி – பஸ்சிமாவாஹினி ஆகிய நதிகளை காண முடியாது. காரணம், அவை காலப் போக்கில் கட்டடங்களாக மாறிவிட்டன) கன்னட மொழியில், “காலி’’ (Gaali) என்ற சொல்லுக்கு “காற்று’’ என்று பொருள். பக்தர்கள், துன்பத்தில் இருக்கும்போது தன்னை அழைத்த மாத்திரத்தில், மறுநொடியில் காற்றில் பறந்துவந்து பக்தர்களை காத்து அருள்வதாலும், கர்நாடகாவில், அனுமனை “வாயுதேவரு’’ என்றே அழைக்கிறார்கள். வாயு – என்ற சொல்லுக்கு காற்று என்றும் பொருள். தேவரு என்றால் கடவுள். இதன் காரணமாகவும் இங்குள்ள இறைவனை, “காலி ஆஞ்சநேயர்’’ என்று அழைக்கப்படுகிறார்.

குழந்தைகளின் பயத்தை போக்கும் அனுமன்

மேலும், “காலி’’ என்ற சொல், தீங்கு விளைவிக்கும் தீய சக்திகளையும் குறிக் கிறது. இங்குள்ள அனுமன், தீய சக்திகளை சுட்டுப் பொசுக்குவதாலும், இவருக்கு காலி ஆஞ்சநேயர் என்ற பெயர் வந்ததாக வரலாற்று ஆர்வலர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக, பக்தர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்துவந்து, அனுமனின் அருளைப் பெறச் செய்கிறார்கள். இதனால், குழந்தைகளுக்கு பயம் போன்ற தீயசக்தியினால் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்னைகளும் நீங்குவதாக கூறப்படுகிறது. பெங்களூர் – மைசூர் சாலையின் மிக அருகிலேயே சுமார் 75 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் அழகாய்த் தோற்றம் கொண்டிருக்கிறது. உள்ளே நுழைந்ததும், வேணு கோபாலர் சந்நதியும், விநாயகர் சந்நதியும் காணப்படுகின்றன. இவர்களை கடந்து உள்ளே சென்றதும், மூலவரான காலி ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

எங்கும் காணகிடைக்காத காட்சி

பிற கோயில்களில் நாம் தரிசிக்கும் அனுமன்களைவிட, இவர் சற்று வித்தியாசமாக தோற்றமளிக்கிறார். மேற்கு நோக்கிய காலி ஆஞ்சநேயர், மிகப் பெரிய அகன்ற கண்களைக்கொண்டவராக காட்சியளிக்கிறார். மேலும், காலி ஆஞ்சநேயரின் உடல் முழுவதிலும் செந்தூரம் பூசப்பட்டு, பக்தர்களை நேரடியாக நோக்கி அருள்பாலிக்கிறார். காலி ஆஞ்சநேயர், தனது இடது கையை இடுப்பில் வைத்துக்கொண்டும், வலது கையில் செண்டுப் பூவைப் பிடித்துக் கொண்டும், வலது இடுப்புக்கு அருகில் ஒரு சிறிய வாள் ஒன்றையும் வைத்துக் கொண்டு, கம்பீரமாக காட்சியளிக்கிறார். காலி ஆஞ்சநேயரின் உதட்டின் மீதுள்ள மீசை, அவரின் அசாத்தியமான வீரத்தை காட்டுகிறது. இவை எங்கும் காண கிடைக்காத அற்புதக் காட்சியாகும்.

அழகிய ராமர்

காலி ஆஞ்சநேயரின் முகம் மிகவும் சாந்தஸ்வரூபியாக (அமைதியாக) காட்சி யளிப்பதால், இவரை பிரசன்ன ஆஞ்சநேயர் என்றும், சாந்த ஞானஸ்வரூபி என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். எப்பவும் போல், வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட அனுமன்களுக்கு, வாலானது வலது பக்கமாக மேலே சென்று அதில் மணியும் காணப்படும், காலி ஆஞ்சநேயருக்கும் அப்படியே காணப்படுகிறது. மேலும், காலி ஆஞ்சநேயருக்கு இடது பக்கத்தில், கிழக்கு நோக்கி  ராமச்சந்திரமூர்த்தியும் அவரோடு லட்சுமணன் மற்றும் சீதாதேவியும் தனி சந்நதிக் கொண்டு பக்தர்களை காத்துவருகிறார்கள். இது தவிர, அனுமனின் வலது பக்கத்தில் சத்யநாராயணருக்கு ஒரு தனி சந்நதியும் காணப்
படுகின்றது.

மற்றொரு அனுமன்

இந்த காலி ஆஞ்சநேயர் கோயிலில் பிரசாதமாக, அனுமனின் பாதங்களில் வைத்து பூஜிக்க பட்ட ஆரஞ்சு நிற தாயத்தும், செந்தூரமும் வழங்கப்படுகிறது. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால், கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த 120 ஆண்டுகளாக, சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கர்நாடக மாநிலத்தில், சங்கராந்தி என்னும் விழா முக்கியமானது (தமிழ்நாட்டில் பொங்கல் போல், கர்நாடகாவில் சங்கராந்தி). அப்போது, ஒரு மாதத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 1985 ஆம் ஆண்டு, ஊர் பெரியவர்களால் உருவாக்கப்பட்ட காலி ஆஞ்சநேய அறக்கட்டளை, கோயிலின் செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டு வருகிறார்கள். இன்னொரு ஆச்சரியமான சம்பவம் என்னவென்றால், சமீபத்தில் இந்தக் கோயிலுக்கு அருகிலுள்ள மழைநீர் வடிகாலில் மற்றொரு ஆஞ்சநேயரின் சிலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சிலை தற்போது ஆய்விற்காக தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது, என்பது ஆச்சரியத்திலும்
ஆச்சரியம்!

ரா.ரெங்கராஜன்

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
எப்படி செல்வது: பெங்களூர் – மைசூர் சாலை மார்க்கமாக, பெங்களூரில் இருந்து சுமார் 7 கி.மீ., தூரத்தில்
பயணித்தால் காலி ஆஞ்சநேயர் கோயிலை அடைந்துவிடலாம்.

 

The post காற்றில் பறந்து வரும் காலி அனுமன் appeared first on Dinakaran.

Read Entire Article