காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்றது; வட தமிழக கடலோரத்தில் கன மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

4 weeks ago 6

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் இன்று நிலை கொள்ளும் என்பதால் வட தமிழக கடலோரப் பகுதியில் ஒருசில இடங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி தமிழக கடற்கரையை ெநருங்கிக் கொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று முன்தினம் இரவு புதுச்சேரிக்கு கிழக்கே 250 கிமீ தொலைவில் நிலை ெகாண்டு இருந்தது. அதே நேரத்தில் குமரிக் கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சி நிலை கொண்டு இருந்தது. இந்த இரு காற்றுகள் இணைவு கடலில் இருக்கிறது. குறிப்பாக வடகிழக்கில் இருந்து வரும் குளிர் அலைகள் தரையில் சந்திப்பு ஏற்படுத்தி மழையை கொடுப்பதற்கு பதிலாக, கடலில் நிலை கொண்டு கடலில் மழையை கொடுத்துக் கொண்டு இருந்தது. நேற்று முன்தினம் முதல் இந்த மழை கடலில் பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்னும் சில நாட்கள் கடலில் நிலை கொண்டு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அது சென்னைக்கு 150 கிமீ தொலைவில் நெருங்கி வந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக் கூடும். நாளை (20ம்தேதி) வடக்கு திசையில், ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். இதன் காரணமாக வடகடலோர தமிழகத்தில் நேற்று ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

மேலும், இன்று வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக 20 மற்றும் 21ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொருத்தவரையில் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20ம் தேதியில் வடதமிழக கடலோரப்பகுதிகளிலும், மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும். வங்கக் கடலில் இன்று, தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளிலும் 20ம் தேதியில் ஆந்திர கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், 21ம் தேதி வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், 22ம் தேதியில் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்றது; வட தமிழக கடலோரத்தில் கன மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article