சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் தீவிரம் அடைந்து இருக்கிறது. பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே பரவலாக மழை கொட்டியது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்தது.
இதன் தொடர்ச்சியாக வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலைக்குள் தமிழகத்தின் வடமாவட்டங்கள்-தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் புதுச்சேரிக்கும்-நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தாழ்வு மண்டலம் இன்று கரையை கடந்தாலும், தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வடமாவட்டங்களில் சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.