கார்த்திகைப் பட்டமும்… நிலக்கடலை சாகுபடியும்!

2 hours ago 2

பொதுவாக கார்த்திகை பட்டம் என்பது கார்த்திகை மற்றும் மார்கழி (நவம்பர் மற்றும் டிசம்பர்) மாதத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. கார்த்திகை மாதத்திற்குள் விதைப்பு மேற்கொண்டால், பயிர்கள் செழித்து வளர்ந்து அதிக மகசூல் கொடுக்க வாய்ப்பு ஏற்படும். இந்தப் பட்டத்தில் போதிய மழை, சரியான தட்பவெப்ப நிலை ஏதுவாக இருப்பதால் நிலக்கடலை பயிருக்கு சாதகமாக இருக்கும். இந்தப் பட்டத்தில் நிலக்கடலையை பயிர் செய்யும் விதம் குறித்து விளக்குகிறார்கள் கோயம்புத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சு.வெங்கடாசலம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு ஊட்டசத்து இயக்கத்தின் தொழில்நுட்ப உதவியாளர்கள் கா.சூர்யப்பிரகாஷ், ஜெ.வித்யா ஆகியோர். நிலக்கடலையை பொறுத்தவரை நன்கு முளைப்பு தன்மையோடு இருக்கக்கூடிய தரமான விதைகளை விதைப்பதன் மூலம் அதிக லாபமும் ஒரே சீரான அறுவடையும் பெற முடியும். தற்போது தொழில் முனைவோர்கள் மரச்செக்கின் மூலம் எண்ணெய் ஆட்டி விற்பணை செய்வதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. கடலைப் புண்ணாக்கு கால்நடைகளுக்கு தீவனமாகவும் மற்றும் இயற்கை உரமாகவும் பயன்படுகிறது.மேலும் விதைப் பண்ணை மூலம் விதைகளை உற்பத்தி செய்து விதைகளை வேளாண்மைத்துறையின் கீழ் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை (டான்சீடா)யின் மூலம் ஒரு கிலோ ஆதார நிலை விதைக்கு ரூ.110க்கும், சான்று நிலை விதைக்கு ரூபாய் 105க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கத்தின் கீழ் செயல்விளக்கத்திடல் மற்றும் விதைகள் விநியோகம் இனத்தில் 50 சதவிதம் மானியத்தில் வழங்க இலக்குகள் பெறப்பட்டு பிரித்தளிக்கப்பட்டுள்ளது.

நிலம் தயாரித்தல்

மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. சட்டிக் கலப்பையைப் பயன்படுத்தி உழுத பின் 3 அல்லது 4 முறை இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழ வேண்டும். பின்னர் 12.5 டன் தொழு உரம் அல்லது நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவு இடவேண்டும்.

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மா விரிடியைக் கலக்கவும். இதை விதைக்கும் முன் (சற்று முன்னர்) செய்ய வேண்டும். இது உயிர் உரங்களுடன் கலக்க ஏதுவானது. இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பூஞ்சாணக் கொல்லிகளுடன் கலக்கக்கூடாது. விதைக்கும் முன் அசோஸ்பைரில்லம் 100 மில்லி மற்றும் பாஸ்போபாக்டீரியா 100 மில்லியுடன் நன்கு கலந்து நிழலில் உலர்த்தி பின் உயிர் உரங்களை அரிசி கஞ்சியுடன் கலந்து விதைநேர்த்தி செய்யவேண்டும். இரசாயன முறையில் 1 கிலோ விதைக்கு கார்பன்டாசிம் 2 கிராம் கலந்து பின் விதைக்கலாம்.

விதை அளவு

எக்டருக்கு 125 கிலோ விதையினைப் பயன்படுத்த வேண்டும். பெரிய விதை கொண்ட ரகங்களுக்கு விதை அளவில் 15 சதவிகிதம் கூடுதலாக இடவேண்டும்.
செடிக்குச் செடி 10 செ.மீ இடைவெளியும், பாத்திக்கு பாத்தி 30 செ.மீ இடைவெளியும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

உரமிடுதல்

தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை மூன்று பிரிவுகளாக பிரித்து அடிப்படையாக 50 சதவீதம், விதைத்த 20ம் நாளில் 25 சதவீதம், விதைத்த 45ம் நாளில் 25 சதவீதமும் அளிக்கலாம். விதைத்த 3ம் நாள் ஃப்ளுகுளோரலின் எக்டருக்கு 2 லி அல்லது பென்டிமெத்தலின் எக்டருக்கு 3.3 லிட்டரை தட்டை விசிறி நுண்குழாய் மூலம் 500 லி தண்ணீர் கலந்து தெளிக்கவும். தொடர்ந்து பாசனம் செய்யவும். விதைத்த 35-40ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும். களைகளைப் பொறுத்து விதைத்த 20-30ம் நாள் களை முளைத்த பின்னர் இமாசிதிபர் எக்டருக்கு 750 மி.லி தெளிக்கவும். களைக்கொல்லி உபயோகிக்கவில்லையென்றால் மண்வெட்டி கொண்டு விதைத்த 20 மற்றும் 40ம் நாள் களை எடுக்க வேண்டும். விதைத்த 3ம் நாள் களை முளைக்கும் முன் ஆக்ஸிப்ளோர்பென் எக்டருக்கு 200 கி தெளிக்கவும். தொடர்ந்து விதைத்த 40-45ம் நாள் கைக்களை எடுக்கவும்.களை முளைப்பதற்கு முன் மெட்டலாகுளோர் எக்டருக்கு 1 கிகி அளிக்கவும் தொடர்ந்து விதைத்த 40ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும்.

இரண்டாவது கைக்களை எடுத்த பின்பு மண் அணைக்க வேண்டும். இது நிலக்கடலையில் ஒரு முக்கியமான நடவடிக்கை. விதைத்த 40-45ம் நாள் மண் அணைப்பதன் மூலம் முளைகள் மண்ணிற்குள் செல்வது தடுக்கப்படும். இது காயின் வளர்ச்சிக்கு உதவுகிறது.தண்ணீர் கிடைக்கும் தன்மை, நிலச்சரிவு மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து 10 மீ முதல் 20 மீ அளவிற்கு படுக்கைகள் அமைக்கவும். வரப்புகளுக்கு இடையே 60 செ.மீட்டரில் வாய்க்கால் அமைக்கவும். வரப்பின் இரண்டு பக்கங்களிலும் விதைக்க வேண்டும். 60 செ.மீ அகலத்திற்கு படுக்கை அமைக்கவும். இரண்டு பக்கங்களிலும் 15 செ.மீ அகலத்திற்கு வாய்க்கால் அமைக்கவும். அந்த படுக்கைகளில் விதைக்க வேண்டும்.
(அடுத்த வார இதழில் மேலும் சில தகவல்கள் இடம்பெறும்)

 

The post கார்த்திகைப் பட்டமும்… நிலக்கடலை சாகுபடியும்! appeared first on Dinakaran.

Read Entire Article