
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். மகிழ் திருமேனி இயக்கியுள்ள 'விடாமுயற்சி' படம் வெளியானதை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'குட் பேட் அக்லி' படம் வரும் ஏப்ரலில் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது.

தற்போது இத்தாலியில் நடைபெறவுள்ள 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்கவுள்ளார். இதற்கான தகுதிச்சுற்று போட்டிகளில் அஜித்குமார் களமிறங்கியுள்ளார்.
இதுகுறித்து அஜித்குமார் கூறும்போது, " துபாய் 24 மணி நேர கார் பந்தயத்துக்கு பிறகு மீண்டும் கார் பந்தயத்தில் களம் இறங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ச்சியான போட்டிகள் இன்னும் அனுபவத்தை தந்து கொண்டிருக்கின்றன. கார் பந்தயத்தில் மிகவும் ரசித்து, ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறேன். ஒரு அணியின் வீரராக, உரிமையாளராக இருப்பது கவுரவம். இன்னும் பல ஆண்டுகளுக்கு கார் பந்தயத்தில் ஈடுபட விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அஜித்குமார் கார் பந்தயத்தில் ஈடுபட்டாலும், வழக்கம்போல படங்களும் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.