திருமலை: ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ஆட்சியில் இருந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி அவரது தாயார் விஜயம்மா சென்ற கார் டயர்கள் கர்னூல் பகுதியில் ஒரே நேரத்தில் வெடித்தன. இதில் அவர் உயிர் தப்பினார். இந்த வீடிேயாவை தெலுங்கு தேசம் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று பதிவிட்டு கூறியிருப்பதாவது: சாலையோரம் இருக்கும் இந்த விலையுயர்ந்த கார் யாரோ ஒருவருக்குண்டானது இல்லை.
எப்போதும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், பாதுகாவலர்களுடன் இருக்கும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரரான ஜெகன் மோகன் ரெட்டி தாயாரும் முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மனைவி விஜயம்மா சென்ற வாகனம் இது. அவரது பாதுகாப்பு, புத்தம் புதிய கார், அதிநவீன பாதுகாப்பு வசதி கொண்ட கார் என இவ்வளவு இருந்தும் ஒரே நேரத்தில் இரண்டு சக்கரங்கள் வெடித்துள்ளது. இப்படிப்பட்ட புதிய காருக்கு இப்படி எவ்வாறு நடந்தது என பலரும் முதலில் ஆச்சரியப்பட்டு பிறகு நமது சைக்கோ (ஜெகன் மோகன்) பின்னணியை அறிந்து என்ன நடந்தது என்று யூகித்தனர்.
இவை அனைத்தும் 2024 தேர்தலுக்கு முன் நடந்தவை. 2019 தேர்தலுக்கு தனது சித்தப்பாவை கொன்றது போல இந்த தேர்தலுக்கு ஜெகன்மோகன் இன்னொரு பெரிய தலையை குறிவைப்பாரா? என்று ஆந்திர மக்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இது நடந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு விஜயம்மா அமெரிக்காவிலேயே தங்கியிருக்கிறார். அந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தம். இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* ஜெகன்மோகன் தங்கைக்கு பாதுகாப்பு
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று முன்தினம் ஏலூர் மாவட்டம் ஜெகநாதபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து யாகத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் கூறுகையில், ‘ஒரு கட்சி தலைவரின் தங்கை (ஜெகன் மோகனின் தங்கையும், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா) என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்கிறார். உங்கள் அண்ணன் உங்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் இருந்திருக்கலாம் ஆனால் உங்கள் உயிரை நாங்கள் காப்போம்’ என கூறினார்.
The post கார் டயர்கள் வெடித்த சம்பவம் தேர்தலுக்காக தனது தாயாரை கொல்ல முயன்றவர் ஜெகன்: தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.