*வேன் டிரைவர் சீரியஸ்; 20 பேர் படுகாயம்
காரைக்குடி : திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. இதில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நேற்று அதிகாலை 1 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பஸ் நிலையத்திற்கு வந்த அரசு பஸ் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
காரைக்குடி அருகே செஞ்சை தேனாற்று பாலம் அருகே பஸ் சென்றபோது, எதிரே ஈரோட்டில் இருந்து திருப்புத்தூர் வழியாக காரைக்குடி வந்த பால் வேன் மோதியது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி மற்றும் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.
வேனில் இருந்த பால் இறக்கும் லோடுமேன்களான திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பை சேர்ந்த ஆறுமுகம் (52), சாணார்பட்டி அருகே பூவநத்துவை சேர்ந்த கர்ணன் (31) மற்றும் தமிழ்பாண்டி (27), ஆகியோர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேன் டிரைவர் ரூபன் (22) கால் துண்டிக்கப்பட்டது. பஸ் கண்டக்டர் செல்வேந்திர பிரசாத், டிரைவர் நாகராஜன் மற்றும் பயணிகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
காரைக்குடி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேன் டிரைவர் ரூபன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேசிபி மூலம் சேதமடைந்த அரசு பஸ் மற்றும் பால் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதுதொடர்பாக காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
பெரும் விபத்து தவிர்ப்பு
அரசு பஸ் டிரைவர் நாகராஜன், எதிரே பால் ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து வருவதை பார்த்து பஸ்சை உடனே சாலையோரம் நிறுத்தினார். இருப்பினும் வேன் பயங்கரமாக பஸ் மீது மோதியது. பஸ் டிரைவர் நேருக்கு நேர் மோதுவதை தவிர்த்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
The post காரைக்குடி அருகே பஸ் – வேன் மோதல் 3 லோடுமேன்கள் பலி appeared first on Dinakaran.