காரமடை, டிச.9: அரங்கநாதர் சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோயில் இருந்து வருகிறது. கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் திருத்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதேபோல் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோவிலுக்கு கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அரங்கனை தரிசனம் செய்து அருள் பெற்று செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் தோலம்பாளையம் சாலையில் உள்ளது.
இங்குதான் மாசி மாதத்தில் நடைபெறும் தெப்பத்தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு அண்மையில் பெய்த தொடர் கனமழை காரணமாக தெப்பக்குளத்தில் தண்ணீர் முழுவதுமாக தேங்கியுள்ளது. மேலும், தண்ணீரை சுத்திகரிப்பு செய்ய இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. தெப்பக்குளத்தில் மொட்டை அடிப்பது, காது குத்துவது உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி விட்டு புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக இந்த தெப்பக்குளத்தில் மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதந்தன. இதனால் எழுந்த துர்நாற்றத்தால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று கோயில் நிர்வாகம் சார்பில் குளத்தில் செத்து கிடந்த மீன்களை அகற்றினர்.
The post காரமடை அரங்கநாதர் சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள் appeared first on Dinakaran.