ஒரு மனிதனுக்கு என்ன தேவை என்பதை நாராயண பட்டதிரி, நாராயணீயத்தில் வேண்டுகின்றார்.
“அஜ்ஞாத்வா தே மஹத்வம் யதிஹ நிகதிதம் விஸ்வநாத க்ஷமேதா:
ஸ்தோத்ரம் சைதத்ஸஹஸ்ரோத்தரமதிகதரம் த்வத்ப்ரஸாதாய பூயாத்
த்வேதா நாராயணீயம் ஸ்ருதிஷு ச ஜநுஷா ஸ்துத்யதாவர்ணநேந
ஸ்பீதம் லீலாவதாரைரிதமிஹ குருதாமாயுராரோக்யஸௌக்யம்’’
ஆரோக்கியம் சௌக்கியம் என்ற மூன்றும் ஒருவனுக்கு இன்றியமையாதது. ஆயுள் அதிகமாக இருக்கும் பலருக்கு ஆரோக்கியம் இருப்பதில்லை. ஆரோக்கியமாக இருக்கின்ற பலருக்கு ஐஸ்வர்யம் கிடைப்பதில்லை. ஐஸ்வரியம் அளவுக்கு அதிகமாக இருக்கும் பலருக்கு ஆயுளும் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதில்லை. இவை மூன்றும் கூடி இருப்பவன் பாக்கியசாலி. ஆரோக்கியம் என்பது உடல்தொடர்புடையது. சூழல் தொடர்புடையது. ஆன்மாவைப்பற்றி பேசும் பண்டைய நூல்கள், உயிரால் இயங்கும் உடலைப்பற்றியும் பேசுகின்றன. அந்த உடல் பெற வேண்டிய ஆரோக்கியத்தைப் பற்றியும் பேசுகின்றன. அந்த உடலுக்கு ஏதேனும் துன்பங்கள் வந்தால், துன்பத்தை நீக்கிக் கொள்ளும் முறையைப் பற்றியும் பேசுகின்றன.காய்ச்சல் என்கின்ற சுரத்தை பற்றிப் பண்டைய வடமொழி நூல்களிலும், தமிழ்நூல்களிலும் பல்வேறு குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. பஞ்சபூதங்களால் ஆனது இந்த உடம்பு. மனிதன் பஞ்சபூதங்களின் சாட்சியாய் வாழ்கின்றான். பஞ்சபூதங்களை உணவாகக்கொள்கின்றான். இறுதியில் பஞ்சபூதங்களில் இந்த சரீரத்தை இணைத்துவிடுகின்றான்.பஞ்சபூதங்களில் அக்னி முக்கியமானது. யாகத்தில் அக்னியானது எப்படி அவிர்பாகத்தை அந்தந்த தேவதையிடம் சென்று சேர்க்குமோ, அதைப்போல ஒவ்வொருவர் தேகத்திலும் இருக்கக்கூடிய அக்கினியானது, உண்ணும் உணவை செரிக்க வைத்து, அந்தந்த செல்களுக்குச் சக்தியாகக் கொண்டுசேர்க்கும் வேலையைச் செய்கின்றது.எனவே நெருப்பு என்பது இந்த உடலோடு இருப்பது.“அக்னி அணைந்து போனால் ஒருவன் அக்னியில் அணைய வேண்டிய நிலை” வந்துவிடும்.இதை உடல்நிலை உஷ்ணம் என்று சொன்னார்கள். இந்த உஷ்ணத்தின் அளவு, வாத, பித்த, கப நாடிகளால் சமச்சீரான நிலையில் பராமரிக்கப்படுகின்றது. இந்த சமச்சீர்நிலை குறைகின்ற போது அது நோயாக மாறுகின்றது. அந்த நோயின் அறிகுறிதான் சுரம் என்கின்ற காய்ச்சல்.இயல்பாக இருக்க வேண்டிய வெப்பநிலை உயர்கின்ற பொழுது அதனைக் காய்ச்சல் என்று சொல்லுகின்றோம்.காய்ச்சல் என்பது நோயல்ல. நோயின் அறிகுறி. அது வாதத்தினால் வந்ததாக இருந்தால் “வாதசுரம்” என்றும், கபத்தினால் வந்ததாக இருந்தால் “கபசுரம்” என்றும், பித்தத்தினால் வந்ததாக இருந்தால் “பித்தசுரம்” என்றும் தமிழ் மருத்துவ நூல்கள் கூறுகின்றன. சித்த மருத்துவத்தில், எந்த வகை சுரமானாலும், அதை 64 வகை சுரத்துக்குள் ஒன்றாக வகுக்க முடியும்.வடமொழி வேத நூல்களிலும் இந்த சுரத்தைப் பற்றிய பல குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. ஆயுர்வேதம் ஆரோக்கியத்தை பேசும் உபவேதநூல். சரக சம்ஹிதை நோய்களைப் பற்றியும், நீக்கிக்கொள்ளும் முறைகளைப் பற்றியும் பேசுகிறது. அதிலுள்ள சில குறிப்புக்கள் சுவாரஸ்யமானது.இன்றைய நோய்த்தொற்றின் அத்தனை அறிகுறிகளையும் நாம் சில பண்டைய நூல்களில் பார்க்கிறோம்.அதர்வ வேதத்தில் சுரம் பற்றிய குறிப்பு இப்படி வருகிறது.யக்ஷ்மன், மனிதர்களையும் மிருகங்களையும் பீடிக்கும் அசுரன். ஒவ்வொரு பாகமாகப் பற்றுவான். கைகால்களைச் செயலிழக்கச் செய்வான், சுரம் தருவிப்பான், நெஞ்சுவலி அளிப்பான், உடல் வலி ஏற்படுத்துவான் என்கிறது.இதே வேதத்தில் குறிபிடப்பட்டுள்ள தாக்மன்நோய் ருத்திரனுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. கூர்மையான வலி ருத்திரனால் ஏற்படுகிறது. ருத்திரனின் பாணங்கள் கட்டிகளை எழுப்புகிறது. தாக்மன் மற்றும் காசம் ருத்திரனின் படைக்கலம். ருத்திரனின் கோபத்தின் காரணமாகவே சுரம் உருவானது என்பது சரக சுசுருத சம்ஹிதையில் உள்ள செய்தி. ரிக்வேத கூற்றின்படி ருத்திரனே முதன்மை மருத்துவனும்கூட.“வைத்யோ நாராயண ஹரி”: என்று, வைணவ சமயத்தில் இறைவனை மருத்துவராகவே ஆழ்வார்கள் பார்க்கிறார்கள். ‘‘மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா’’ என்று பெரியாழ்வார் போற்றுகின்றார்.பாற்கடலைக் கடைந்தபொழுது பலவிதமான பொருள்கள் வந்தன. அதில் எம்பெருமானின் அம்சமாக, தன்வந்திரி பகவான் அமிர்தகலசம் கரத்தில் ஏந்தி தோன்றினார் (அமிர்த கலச ஹஸ்தாய என்பது தன்வந்திரி மந்திரம்). ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப மருத்துவர் இருப்பது போலவே, தன்வந்திரி சந்நதிகளும் சில முக்கியமான கோயில்களில் இருக்கும். குறிப்பாக திருவரங்கத்தில் தன்வந்திரி தனி சந்நதி உண்டு. பெருமாளின் பிரசாதத்தை அவர் சோதித்த பிறகே பெருமாளுக்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அவரிடம் பிரார்த்தித்தால், எல்லா நோய்களும் போய்விடும்.அதைப்போலவே காய்ச்சலை நீக்கும் கடவுளாக சிவபெருமானின் அம்சத்தை ஜுரேஸ்வரர் என்கின்ற திருநாமத்தோடு சில கோயில்களில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
இப்பொழுது உலகமெல்லாம் நோய்த் தொற்று தலைவிரித்தாடுகின்றது. அதன் முதல்நிலை அறிகுறியாகச் சளியும் காய்ச்சலும் மனிதர்களை சங்கடப்படுத்துகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலும், இப்படிப்பட்ட ஆரோக்கிய சிக்கல்கள் மனிதகுலத்தை ஆட்டிப் படைத்தன.ஒருமுறை திருஞான சம்பந்தர் அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு வந்து வழிபட்ட பிறகு திருச்செங்கோட்டில் தங்கியிருந்தார். அந்தக் கோயிலுக்கு மக்கள் வருவதில்லை என்று அறிந்தார். மக்கள் எல்லோரும் ஊரில் வீட்டைவிட்டு வெளியே வராமல் அச்சத்தோடு அடங்கிக் கிடந்தார்கள். விசாரித்தபோது, ஊர் முழுக்க ஏதோ ஒரு இனம்புரியாத தொற்றுநோய் பரவியிருந்தது. அதன் விளைவாக மக்களை குளிர்ஜுரம் வாட்டி வதைத்தது. இதை அறிந்த திருஞானசம்பந்தர், இதற்கு ஒரு விடை தேட வேண்டும் என்று விரும்பினார். மக்களும் ஞானசம்பந்தரின் மகிமையை அறிந்து, அவர் திருவடிகளில் விழுந்து வணங்கி, தங்களை, இனம்புரியாத காய்ச்சல்நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினர். மக்களின் வேண்டுகோளை ஏற்று திருஞானசம்பந்தர் இறைவனை நினைத்து `அவ்வினைக் கிவ்வினை’ என்று பதிகம் பாடினார்.
‘அவ்வினைக்கு இவ்வினையாம் என்று
சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல்போற்றுது நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறாதிரு
நீலகண்டம்’
என்று தொடங்கி பதினோரு தேவாரப் பதிகங்கள் பாடினார்.பொதுமக்களைப் பார்த்து, ‘‘நீங்களும் விடாமல் இந்த பதிகத்தைப் பாராயணம் செய்யுங்கள்’’ என்றார்.பொதுமக்களும் குழுவாகப் பாடி, குளிர்ஜுரம் நீங்கப் பெற்றார்கள். ஞானசம்பந்தர், மரத்தின் அடியில் மக்களுக்காக இறைவனிடம் வேண்டி பதிகம் பாடிய இடம் `சோகி மடம்’ என்று அழைக்கப்பட்டது. அந்த இடத்தில் `ஜூரகண்டேஸ்வரர்’ என்ற சிறிய கோயில் உள்ளது. இன்றும் கடுமையான காய்ச்சல் நோயால் அவதிப்படுபவர்கள் இந்த ஜுரகண்டேஸ்வரரை வணங்குகிறார்கள். கோயிலில் ஜூரகண்டேஸ்வரருக்கு ரச சாதத்தைப் படைத்து பிரசாதமாக வழங்குகிறார்கள்.மதுரையில் கூன்பாண்டியன் அரசாட்சிசெய்துவந்த பொழுது ஒரு முறை, கடுமையான காய்ச்சல்நோய் தாக்கியது. அப்பொழுது மன்னன் சமண சமயத்தைச் சார்ந்திருந்தான். வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டனர். சமணர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு மருத்துவம் செய்தனர். ஆயினும் மன்னனின் நோய் குணமாகவில்லை. கடைசியில் திருஞானசம்பந்தருக்கு இந்தச் செய்தி சென்றது. ஞானசம்பந்தர் மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலய மடப்பள்ளி சாம்பலைக்கொண்டு வரச்செய்தார். அதனை மன்னனுக்கு அணிவித்தனர். அப்பொழுது சம்பந்தர் திருநீற்றின் பெருமையைக் குறித்து ஒரு பதிகம் பாடினார்.
‘மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான்
திருநீறே.’
என்ற திருநீற்றுப் பதிகம் பாடியதும், மன்னனின் உடல் வெப்பம் குறைந்து இயல்புநிலைக்கு வந்தான். காய்ச்சலின் வேகத்தைக் குறைத்து குணம் வழங்கவல்ல இறைவன் என்பதால் இவருக்கு ஜுரஹரேஸ்வரர் மற்றும் ஜுரஹரதேவர் என்ற திருநாமம். ஒருசில சிவாலயங்களில் தனிச் சந்நதிகள் உண்டு. சில கோயில்களில் தனிமூர்த்தங்களாக இருப்பதையும் காணலாம். விதவிதமான தோற்றங்களில் குறிப்பாக மூன்று முகம், மூன்று கரங்களுடன் சில இடங்களிலும், சில இடங்களில் சிவலிங்கத் திருமேனியுடனும் இந்த ஜூரஹரேஸ்வரர் காட்சி தருகிறார்.புகழ்பெற்ற உச்சிப்பிள்ளையார் கோயில் தாயுமானவர் சந்நதியில் பிரம்மாவின் அமைப்பில் சுரம் தீர்க்கும் மூர்த்தியாகக் காட்சி தருகின்றார். திருமழபாடியிலும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும், சேலம் அருகில் தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலிலும் இவருக்குச் சந்நதி உண்டு.தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில், திருக்கண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில் புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் பசுபதீஸ்வரர், சாந்தநாயகி சந்நதிகளும், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை சந்நதியோடு ஜுரஹரேஸ்வரருக்கும் உபசந்நதி உண்டு. சுரநோயால் துன்பப்படுகிறவர்கள், ஜுரஹரேஸ்வரமூர்த்திக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழுங்கலரிசி நிவேதனம் செய்தால் சுரம் நீங்குவது இன்றும் கண்கண்ட பிரார்த்தனையாக உள்ளது. மதுரையின் மத்தியில் உள்ள இம்மையில் நன்மை தருவார் ஆலய ஜுரஹர லிங்கம் மற்றும் ஜுர சக்திக்கு ஒவ்வொரு திங்களும் சூரிய அஸ்தமன நேரத்தில் மிளகு, பால், ரசம் சாதம், இளநீர் படைத்து பூஜை செய்யப்படுகிறது. தீராத விஷக்காய்ச்சல் உள்ளவர்கள் அர்ச்சனை செய்து ரசம்சாதம் பெற்று சாப்பிட்டால் எந்தவிதமான காய்ச்சலும் சரியாகும் என்பது உண்மை.ஜுரஹரேஸ்வர மூர்த்தியை வணங்குவோம். இந்த கொடிய தொற்றிலிருந்து நலம் பெறுவோம்.
The post காய்ச்சல் நோய் போக்கிக் காப்பாற்றும் ஜுரேஸ்வரர் appeared first on Dinakaran.