கோவை: கோவை பூண்டி பகுதியில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இங்கு 6. கி.மீ. தொலைவு ஏறிச் சென்று சுயம்பு லிங்கமாக உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை பக்தர்கள் தரிசிக்கின்றனர். இந்நிலையில், காரைக்கால் நாயக்கன்குளம் வீதியைச் சேர்ந்த கெளசல்யா (45) நேற்று தனது குடும்பத்தினருடன் வெள்ளியங்கிரி மலை ஏறினார். 7-வது மலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோல, திருவண்ணாமலையைச் சேர்ந்த செல்வகுமார் (32) என்பவர் 5-வது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரழந்தார்.
தகவலறிந்த வனத் துறையினர் ‘டோலி’ கட்டி இருவரது உடலையும் கீழே கொண்டு வந்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போளுவாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரநாத் கூறும்போது, “மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் வெள்ளியங்கிரி மலை ஏற தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது" என்றார்.