திருச்சி: மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கும் நிதியை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றது தமிழக மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறைதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாளப் போராட்டம்தான். அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதில்லை. பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலமாக மத்திய அரசு நெருக்கடி தருகிறது. மேலும், மாநிலங்களுக்கு முறையாக வழங்க வேண்டிய நிதியையும் தருவதில்லை. திட்டமிட்டே இதை செய்கிறார்கள்.