செங்கல்பட்டு: காய்கறி வாங்கி கொண்டு வந்த மூதாட்டியிடம் இரு மர்ம நபர்கள் நூதன முறையில் 4 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பித்து சென்றனர். செங்கல்பட்டு நகர காவல் எல்லைக்கு உட்பட்ட அண்ணா சாலை பகுதியில் வசித்து வருபவர் சந்திரன் என்பவரது மனைவி வசந்தா (61). இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மூதாட்டி நேற்று செங்கல்பட்டு காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகள் வாங்கிக் கொண்டு மார்க்கெட் அருகில் உள்ள பள்ளிவாசல் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில், இவரை, பின் தொடர்ந்து வந்த இரு ஆண் நபர்கள் அந்த பாட்டியிடம் தங்க நகைகளை இப்படியா பாதுகாப்பு இல்லாமல் அணிந்து செல்வது. இதெல்லாம் பாதுகாப்பில்லை பாட்டி அந்த நகைகளை கழட்டி எங்களிடம் கொடுங்கள் பாதுகாப்பாக நாங்கள் பேப்பரில் மடித்து தருகிறோம். நகைகளை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து செல்லுங்கள் என மூதாட்டியிடம் பேசி நம்ப வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, தங்கச்சங்கிலி மற்றும் வளையலை கழட்டி அவர்களிடம் கொடுத்துள்ளார். தங்க நகைகளை பேப்பரில் மடித்து காய்கறி வாங்கி வந்த பையில் வைத்து விட்டோம். பத்திரமாக செல்லுங்கள் பாட்டி என கூறிவிட்டு அங்கிருந்து சிட்டாய் பறந்துவிட்டனர். அங்கிருந்து தனது வீட்டுக்கு செல்லும் வழியில் சந்தேகப்பட்டு தான் காய்கறி வாங்கி வந்த பையை சோதனை செய்து பார்த்தபோது தான் பேப்பரில் மடித்து வைத்த 4 சவரன் நகையை காணவில்லை என தெரியவந்தது.
இதனால், பதறிய மூதாட்டி தனக்கு நடந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் முதாட்டியிடம் நகைகளை அபகரித்து சென்ற மர்மநபர்கள் குறித்து சம்பவ நடந்த இடத்தினருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post காய்கறி வாங்கி கொண்டு வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 4 சவரன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.