புதுடெல்லி: சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பரவிய கொரோனா தற்போது இந்தியாவில் ெமதுவாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் வசதி உள்ளிட்டவைகளின் இருப்பை உறுதி செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளை கொரோனா தொற்று அச்சுறுத்திவரும் நிலையில், அதற்கு காரணம் 2 புதிய வகை கொரோனா மாறுபாடு வைரஸ்கள்தான் என உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து தெரிவித்துள்ளது. அதன்படி, என்பி.1.8.1 மற்றும் எல்எஃப்.7 ஆகிய இரு உருமாறிய கொரோனா வைரஸ்களால் தான், தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 வகை கொரோனாவும் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஒருவருக்கு என்பி.1.8.1 (NB.1.8.1) வைரஸ் தொற்றும், குஜராத்தில் 4 பேருக்கு எல்எஃப்.7 (LF.7) வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன. எனினும், இந்த மாறுபாடுகள் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவை அபாயகரமானவை என்று இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ்களால், இதுவரை இந்தியாவில் 5 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத. பெங்களூருவில் 84 வயது முதியவர் ஒருவரும், தானேவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரும் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் மட்டுமே 4 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், இந்தாண்டு இதுவரை மொத்தம் 5 பேர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. எனினும் உயிரிழந்தவர்களுக்கு வேறு பாதிப்புகளும் இருந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, பெங்களூருவில், 9 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 363 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் JN.1 உருமாறிய வைரஸ் முதன்மையாக இருந்தாலும், NB.1.8.1 என்ற புதிய துணை வைரசும், LF.7 வைரஸ் நான்கு பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது பரவி வரும் NB.1.8.1 மற்றும் LF.7 வைரஸ்கள், அதிக பரவுதல் திறன் கொண்டவையோ அல்லது தீவிர நோயை ஏற்படுத்துபவையோ இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது.
The post இந்தியாவில் தொற்று பரவல் அதிரிப்பு; 363 பேருக்கு கொரோனா; 5 பேர் பலி: 2 வகை வைரசால் மக்கள் அச்சம் appeared first on Dinakaran.